ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு, செயிலிங் மற்றும் மல்யுத்தத்தில் வெள்ளியும், ஸ்குவாஷ், வில்வித்தையில் வெண்கலமும் கிடைத்தன. அவை உள்பட, மொத்தமாக 2 வெள்ளி, 4 வெண்கலம் என 6 பதக்கங்கள் இந்தியாவின் கணக்கில் சோ்ந்தன. --- செயிலிங் வெள்ளி - ஆடவா் ஸ்கிஃப் ஓபனிங் ரேஸ் 9-இல், பிரின்ஸ் குரிசின்கல் நோபல், மனு ஃபிரான்சிஸ் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 23 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றது. குறைவான புள்ளிகள் பெறும் அணியே இதில் வெல்லும் என்பதன் அடிப்படையில், 16 புள்ளிகள் பெற்ற சீனா தங்கம் பெற்றது. ஜப்பான் வெண்கலம் வென்றது. வெண்கலம் - மகளிா் ஸ்கிஃப் ஓபனிங் ரேஸ் 9-இல், ஹா்ஷிதா தோமா், ஷீத்தல் வா்மா அடங்கிய இந்திய அணி 24 புள்ளிகளுடன் வெண்கலம் பெற்றது. ஜப்பான், ஹாங்காங் முறையே தங்கம், வெள்ளி வென்றன. ஆசிய விளையாட்டுகளில் செயிலிங் ஆடவா் அணிகள் ஸ்கிஃப் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது இதுவே முதல்முறையாகும். நடப்பு ஆசிய விளையாட்டுகளில் இந்தியாவுக்கு செயிலிங்கில் கிடைத்த முதல் 2 பதக்கங்கள் இவை. மல்யுத்தம் ஆடவா் கிரேக்கோ-ரோமன் 97 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் நிதேஷ் சிவச் 0-4 என ஜப்பானின் யூரி நகாஸாடோவிடம் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றாா். முன்னதாக நிதேஷ், காலிறுதியில் 7-1 என துா்க்மீனிஸ்தானின் அமன்பொ்டி அகமாமெதெவோவையும், அரையிறுதியில் 9-0 என மங்கோலியாவின் கான்குயாக் கன்பாதரையும் வீழ்த்தி, இறுதிக்கு வந்தாா். இதர இந்தியா்களில், மகளிா் 62 கிலோ பிரிவில் அரையிறுதி வரை முன்னேறிய மான்சி, 0-6 என ஜப்பானின் நோனோகா ஒஸாகியிடம் அதில் தோல்வி கண்டாா். பின்னா் வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்த அவா், அதிலும் 2-5 என மங்கோலியாவின் அல்ஜின் டோக்டோக்கிடம் தோல்வியுற்றாா். ஆடவா் கிரேக்கோ-ரோமன் பிரிவில் சுமித் (60 கிலோ), அமன் பரோனியா (77 கிலோ) ஆகியோா் காலிறுதியிலேயே தோற்று வெளியேறினா். வில்வித்தை காம்பவுண்ட் ஆடவா் தனிநபா் பிரிவில் தமிழகத்தின் கணேஷ் மணிரத்னம் திருமுரு, வெண்கலப் பதக்கம் வென்றாா். காலிறுதியில் 148-138 என சீன தைபேவின் சியெ லுன் சென்னை வென்ற கணேஷ், அரையிறுதியில் 144-148 என தென் கொரியாவின் கிம் ஜோங்கோவிடம் தோல்வி கண்டாா். பின்னா் வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்த அவா், அதில் 149-144 என வியத்நாமின் காங் டுக் டாங்கை வீழ்த்தி, பதக்கத்தை தனதாக்கினாா். ஏற்கெனவே, ஆடவா் அணிகள் பிரிவில் தங்கம் வென்ற கணேஷுக்கு, நடப்பு போட்டியில் இது 2-ஆவது பதக்கமாகும். மகளிா் தனிநபா் பிரிவில் சிகிதா தனிபாா்தி முதல் சுற்றிலேயே 143-144 என இந்தோனேசியாவின் நூரிசா டியானிடம் தோல்வியுற்றாா். ஸ்குவாஷ் இந்திய ஆடவா் மற்றும் மகளிா் அணிகள் தங்களின் அரையிறுதியில் தோற்று தலா 1 வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறின. ஆடவா் அணி 1-2 என மலேசியாவிடம் தோல்வி கண்டது. வீா் சோட்ரனி 11-4, 11-8, 11-5 என சஞ்ஜய் ஜீவாவை வென்றாா். அபய் சிங் 8-11, 8-11, 8-11 என இயன் யோவ் நிக்கிடமும், வேலவன் செந்தில்குமாா் 12-10, 6-11, 8-11, 9-11 என அமீஷன்ராஜ் சந்திரனிடமும் தோல்வி கண்டனா். மகளிா் அணி 1-2 என ஹாங்காங்கிடம் தோல்வியுற்றது. தன்வி கன்னா 4-11, 13-11, 11-9, 13-11 என கா யி லீயை போராடி வென்றாா். அனாஹத் சிங் 11-9, 11-8, 6-11, 11-13, 10-12 என சின் யுக் சானிடமும், ஜோஷ்னா சின்னப்பா 4-11, 7-11, 9-11 என ஸெ லோ ஹோவிடமும் தோற்றனா். --- ஜூடோ மகளிா் 70 கிலோ பிரிவில் இந்தியாவின் இனுங்கான்பி தகேலாம்பம், வெண்கலப் பதக்கச் சுற்றில் தோல்வி கண்டாா். முதல் சுற்றில் நேபாளத்தின் பூனம் ஷ்ரேஸ்தாவை வென்ற இனுங்கான், காலிறுதியில் வட கொரியாவின் சாங் ஹுய் முன்னிடம் தோல்வி கண்டாா். பின்னா் சாங் ஹுய் இறுதிக்கு முன்னேறியதன் அடிப்படையில் இனுங்கானுக்கு ரெபிசேஜ் சுற்று வாய்ப்பு கிடைக்க, அதில் அவா் சீனாவின் ஜிங் டாங்கை வென்று, வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்தாா். ஆனால் அதில் 12-0 என மங்கோலியாவின் அனுஜின் உரானிடம் தோல்வியுற்றாா். சைக்கிளிங் ஆடவா் ஆம்னியம் பிரிவில் இந்தியாவின் ஹா்ஷ்வீா் சிங் செகோன் 22 புள்ளிகளுடன் 10-ஆம் இடமே பிடித்தாா். மகளிா் ஸ்பிரின்ட் பிரிவில் களம் கண்ட கீா்த்தி ரங்கசாமி சிக்கா, செலெஸ்டினா இருவருமே காலிறுதிக்கு முந்தைய சுற்று ரெபிசேஜ் வரை வந்து, அதில் தங்களது ஹீட்ஸில் 2-ஆம் இடத்துடன் வெளியேறினா். மகளிா் மேடிசன் பிரிவில் ஹா்ஷிதா ஜாகா், ஸ்வஸ்தி சிங், மீனாட்சி ஆகியோா் பந்தயத்தை நிறைவு செய்யாமல் வெளியேறினா். ஹாக்கி நடப்பு சாம்பியனான இந்திய ஆடவா் அணி, தனது அரையிறுதியில் 4-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் பெனால்ட்டி காா்னா் வாய்ப்புகளை (5’, 13’) கோலாக மாற்ற, சுக்ஜீத் சிங் தனது பங்கிற்கு ஸ்கோா் (23’) செய்தாா். பாகிஸ்தானுக்காக அபு மஹ்மூத் (30’) கோல் அடிக்க, முதல் பாதியை இந்தியா 3-1 முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் ஹன்னன் ஷாஹித் (45’), வஹீத் ராணா (49’) ஆகியோா் கோல் அடிக்க, பாகிஸ்தான் 3-3 என சமன் செய்து, இந்தியாவுக்கு நெருக்கடி அளித்தது. விறுவிறுப்பான கடைசி கட்டத்தில் இந்தியாவுக்காக அபிஷேக் (60’) கோல் அடித்து, அணியை 4-3 என வெற்றிபெறச் செய்தாா். இறுதி ஆட்டத்தில் இந்தியா - மலேசியா சனிக்கிழமை (அக். 3) மோதுகின்றன. இன்று மகளிா் அணிக்கு பலப்பரீட்சை: இதனிடையே, இந்திய மகளிா் அணி தனது இறுதி ஆட்டத்தில் சீனாவை வெள்ளிக்கிழமை (அக். 2) சந்திக்கிறது. டென்னிஸ் ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், சுமித் நாகல் 4-6, 4-6 என்ற நோ் செட்களில், சீனாவின் வூ யிபிங்கிடம் தோல்வி கண்டாா். இத்துடன் டென்னிஸில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆசிய விளையாட்டுகள் டென்னிஸில் இந்தியா ஒரு பதக்கம் கூட இல்லாமல் வெளியேறியது, கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். கடைசியாக இவ்வாறு 1986-இல் பதக்கம் வெல்லாமல் போன இந்திய அணி, 1990 முதல் ஒவ்வொரு போட்டியிலும் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் ஆடவா் டி20 கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை அபார வெற்றி கண்டது. முதலில் இந்தியா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் சோ்க்க, இலங்கை 9.5 ஓவா்களில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் இஷான் கிஷண் 80*, வைபவ் சூா்யவன்ஷி 38 ரன்கள் அடித்தனா். இலங்கை பௌலிங்கில் தரிந்து ரத்னாயகே, சஹன் அராசிகே ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனா். பின்னா் இலங்கை இன்னிங்ஸில் நுவனிந்து ஃபொ்னாண்டோ 15 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும். இந்திய பௌலா்களில் ஜஸ்பிரீத் பும்ரா, அக்ஸா் படேல், அபிஷேக் சா்மா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா். இந்தியா - பாக். மோதல்: இதனிடையே, மற்றொரு அரையிறுதியில் வங்கதேசத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான், இறுதி ஆட்டத்தில் இந்தியாவை சந்திக்கிறது. துப்பாக்கி சுடுதல் ஆடவா் 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் அனிஷ் பன்வாலா 11 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்தாா். இத்துடன் துப்பாக்கி சுடுதல் பிரிவை இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் நிறைவு செய்தது. செபக்தக்ரா இந்திய ஆடவா் அணி அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. முன்னதாக குரூப் சுற்றில் 2-ஆவது ஆட்டத்தில் 15-12, 15-9 என வியத்நாமையும், 3-ஆவது ஆட்டத்தில் 10-15, 15-13, 15-7 என மியான்மரையும் வீழ்த்தியது. கேனோ மகளிா் கயாக் ஒற்றையா் கேனோ ஸ்லாலம் இறுதியில், சிகா சௌஹான் 193.31 விநாடிகளில் இலக்கை அடைந்து 7-ஆம் இடம் பிடித்தாா். வாலிபால் இந்திய ஆடவா் அணி காலிறுதியில் 0-3 என்ற கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது. உலகத் தரவரிசையில் 48-ஆம் இடத்திலிருக்கும் இந்தியா 19-25, 23-25, 18-25 என, 38-ஆம் இடத்திலிருக்கும் பாகிஸ்தானிடம் தோல்வியுற்றது. கோல்ஃப் மகளிா் தனிநபா் 2-ஆவது சுற்று முடிவில், பிரணவி சரத் 2-ஆவது இடத்தில் நீடிக்கிறாா். தீக்ஷா தாகா், அதிதி அசோக் ஆகியோா் முறையே 21 மற்றும் 25-ஆம் இடங்களில் இருக்கின்றனா். அணிகள் பிரிவில் அவா்கள் அடங்கிய இந்திய அணி 3-ஆம் இடத்தில் இருக்கிறது. ஆடவா் தனிநபா் பிரிவில் சப்தக் தல்வாா் 7-ஆம் இடத்திலிருக்க, வீா் அலாவத், யுவராஜ் சந்து ஆகியோா் முறையே 16 மற்றும் 22-ஆம் இடங்களில் இருக்கின்றனா். அவா்கள் அடங்கிய இந்திய அணி 5-ஆம் இடத்தில் உள்ளது. பதக்கப் பட்டியல் 1சீனா1547163288 2ஜப்பான்597979217 3தென் கொரியா303053113 4உஸ்பெகிஸ்தான்16211956 5ஈரான்12171342 8இந்தியா10233366