தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் இல்ல மணவிழா, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது: "தவெக ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் வழங்கப்படாததால், குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது.சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணைக்கு நேரில் சென்ற முதல்வர், 45 நாள்களுக்குத் தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்தார். 45 நாள்கள் என்பது எப்படிப் போதுமானதாக இருக்கும்? சம்பா விளைச்சலை முழுமையாகப் பெற வேண்டும் என்றால், ஜனவரி இறுதிவரை காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் சம்பா சாகுபடியில் முழுமையான விளைச்சல் பெற முடியும்.இந்த ஆட்சி வந்த பிறகு காவிரி நதிநீர்ப் பிரச்னையில் கவனம் செலுத்தவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் பலமுறை தண்ணீர் திறக்க உத்தரவிட்டும், அந்த நீரைப் பெறுவதற்கு தவெக அரசு முயற்சி எடுக்கவில்லை. அதில் அக்கறை செலுத்தவில்லை. தமிழகத்திற்கு உரிய தண்ணீரைப் பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்தது அதிமுக அரசு. அந்தத் தீர்ப்பைக்கூட நடைமுறைப்படுத்தாத கையாலாகாத அரசாக தவெக அரசு உள்ளது.காவிரியில் அணை கட்டுவோம் என கர்நாடக முதல்வர் தினந்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறார். இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால், இதற்கு விஜய் இதுவரை பதில் அளிக்கவில்லை. மேகேதாட்டு விவகாரத்தில் விவசாயிகளின் அச்சத்தைப் போக்கும் வகையில், முதல்வர் அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். காவிரி விவகாரத்தில் எந்தக் கட்டுமானமும் கட்டக் கூடாது, தண்ணீரைத் தேக்கக் கூடாது என்று அற்புதமான தீர்ப்பை நாங்கள் பெற்றுக் கொடுத்துவிட்டோம். அதனை தவெக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.கர்நாடக அரசு தமிழகத்திற்குரிய தண்ணீரைத் திறக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கும் தள்ளுபடி ஆகிவிட்டது. அந்த அளவிற்குத்தான் இவர்களுடைய நிர்வாகம் உள்ளது. நீதிமன்றத்தில் உரிய வாதத்தை எடுத்து வைத்திருக்க வேண்டும்.காவிரி நீர் என்பது நமக்குரிய பங்கு நீர். அவர்கள் ஒன்றும் சும்மா கொடுக்கவில்லை. நமக்குரிய பங்கு நீரைக்கூடப் பெற முடியாத கையாலாகாத அரசாக தவெக அரசு உள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகளும், இதனை நம்பியுள்ள விவசாயத் தொழிலாளர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்."மேலும், கொளத்தூர் இடைத்தேர்தல் குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். Edappadi Palaniswami stated that Delta farmers have been severely affected during the TVK rule.ஜார்க்கண்ட்: குப்பை ஏற்றும் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட தூய்மைப் பணியாளரின் உடல்