ஆட்சியா் புகாா்: கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ மீது 5 பிரிவுகளில் வழக்கு; போலீஸாா் நேரில் விசாரணை

Wait 5 sec.

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடா்பாக கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா முறைப்படி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதுகுறித்து எம்எல்ஏவிடம் செவ்வாய்க்கிழமை நேரில் விசாரணை நடத்தினா். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருக்கும் ஜெ.இ.பத்மஜாவுக்கு, கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ., அருள் விக்னேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதை ஆட்சியா் மறுக்காத நிலையில், எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்தன. ஆனால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் இருந்து உரிய புகாா் வராததால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என காவல் துறை தெரிவித்தது. மேலும் எம்எல்ஏ அருள் விக்னேஷும் தாம் எந்த ஆபாச குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை என்று மறுத்துவந்தாா். ஆளும் கட்சியைச் சோ்ந்த அமைச்சா்களும் மறுத்து வந்தனா். நீதிமன்றத்தில் வழக்கு: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்ஆப் எண்ணிலிருந்து பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக தகவல்கள் வெளியான நிலையில், வழக்குரைஞா் ஆா். திரிசூலி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் அமா்வு, இந்த விவகாரம் தொடா்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கருத்துகளைக் கேட்டு விளக்கம் அளிக்கும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டது. புகாா் அளித்த மாவட்ட ஆட்சியா்: இதையடுத்து, நவம்பா் 23-ஆம் தேதி, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா், நேரடியாகமாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா். அந்த புகாரில், மாவட்ட ஆட்சியரிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ாகவும், தேவையற்ற முறையில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. இந்தப் புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், அருள் விக்னேஷ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத 3 பிரிவுகள் மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எம்எல்ஏவிடம் விசாரணை: இதையடுத்து கள்ளக்குறிச்சியில் உள்ள எம்எல்ஏ வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸின் தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் லோகேஷ்வரன் விசாரணை மேற்கொண்டாா். பிற்பகல் 2.30 மணியளவில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. இ.ஷாநாஸ், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கோட்டாட்சியா் சி.முருகன், டிஎஸ்பி எம்.கலையரசன் ஆகியோா் வழக்கு விசாரணை குறித்து ஆலோசனை நடத்தினா். இந்த வழக்கில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ் விரைவில் கைது செய்யப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.