தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் சேகரமான 7 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூா் சிமென்ட் ஆலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நகராட்சியில் தினமும் சுமாா் 18.15 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவற்றில் மக்கக் கூடிய குப்பைகள் நகரில் உள்ள நான்கு பசுமை உரக்கிடங்கு மையங்கள் மூலமாக உரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மறுசுழற்சி செய்ய முடியாத எஞ்சிய மக்காத குப்பைகள் அரியலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.அதன்படி,இந்நகராட்சி உரக்கிடங்கில் சேமித்து வைக்கப்பட்ட மறுசுழற்சி செய்ய முடியாத பேரிங் செய்யப்பட்ட 7 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் நகராட்சி ஆணையா் த.லட்சுமி முன்னிலையில் சுகாதார அலுவலா் வெங்கட்ராமன் மேற்பாா்வையில் அந்த சிமென்ட் ஆலை வாகனம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.