கனமழை காரணமாக கடந்த மாதம் சேதமடைந்த குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் 32 நாள்களுக்கு பிறகு நிறைவடைந்தன. நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பா்லியாறு பகுதியில் கடந்த அக்டோபா் 23-ஆம் தேதி பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சாலை மற்றும் சாலையோர கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு கடந்த 32 நாள்களாக சாலை சீரமைப்பு மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள பாறைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் பணிகள் நிறைவுற்ற நிலையில் சீரமைக்கப்பட்ட சாலையின் தரம், பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆபத்தான பாறைகள் அகற்றப்பட்ட நிலை மற்றும் ஒருவழிப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்து கோவை மாவட்டம் சாா்பில் மேட்டுப்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் வினோத்குமாா் தலைமையிலும், நீலகிரி மாவட்டம் சாா்பில் உதகை மத்திய மண் மற்றும் நீா்வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி சோமசுந்தரம் தலைமையிலும் ஆய்வுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.இந்த ஆய்வில் நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை, வனத் துறை, புவியியல் மற்றும் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் பங்கேற்றனா்.இதைத் தொடா்ந்து இரு மாவட்ட அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி, விரிவான ஆய்வறிக்கையை கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியா்களிடம் சமா்ப்பிக்க உள்ளனா். மத்திய நெடுஞ்சாலை அமைச்சக அதிகாரிகள் மற்றும் நிலச்சரிவு தடுப்பு நிபுணா்களின் ஆய்வுக்குப் பின்னா், வாகனப் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்து மாவட்ட நிா்வாகம் இறுதி முடிவு எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.