ராமபிரானின் பாதம்பட்ட புண்ணிய தலமாக விளங்குகிறது ராமநாதபுரத்தில் உள்ள பெருங்கருணை. ராவணனால் சிறை பிடிக்கப்பட்ட சீதையை மீட்டு வரும் பொருட்டுச் செல்லும்போதும், மறுபடியும் சீதையை மீட்டு அயோத்தி திரும்பும் போதும் ராமபிரான் இத்தலம் வந்ததாக நம்பப்படுகிறது. இங்குள்ள வரதராஜப் பெருமாள் கோயில் பழைமையானது.கி.பி. 1300-இல் பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் இப்பகுதி வடதலை செம்பில்நாடு என்ற உள்நாட்டுப் பிரிவில் அடங்கியிருந்தது. நிலவளம், நீர்வளம் மிக்க இப்பகுதி "பெருங்கருணை சதுர்வேதி மங்கலம்' என அழைக்கப்பட்டது. ஒருசமயம் இப்பகுதியை விக்கிரம பாண்டியன் என்பவன் நல்லாட்சி நடத்தி வந்தான். இவருக்கு மழலைப் பாக்கியம் இல்லாத குறை நீங்கிட அழகர் கோயிலில் உள்ள தனது குலதெய்வமான பரமசுவாமி சந்நிதியில் மனமுருக வேண்டினான். அப்போது, அங்கிருந்தவர்கள் சேதுக்கரை ஆதிஜெகந்நாதர் கோயில் பரவாசுதேவனை வேண்டி வர மழலை வரம் கிட்டும் எனச் சொன்னார்கள்.இப்பரிகார பூஜையை மன்னன் நடத்தி முடித்த கையோடு அவனுக்கு மகன் பிறந்தான். ஸ்ரீவல்லபன் என்ற இவனே பிற்காலத்தில் சகல கலைகளும் கற்றுத்தேறி அனைவராலும் "வல்லபதேவர்' என்று புகழப்பட்டான். ஒரு சமயம் வழக்கம்போல் தனது தேசநிலை அறியும் பொருட்டு சென்ற மன்னன், அந்திசாயும் வேளையில் கொற்றவாள்குடி என்ற சிற்றூரில் தங்கினான். அந்நேரம் அங்கு மன்னன் தங்கியுள்ள தகவல் காட்டுத்தீ மாதிரி சுற்றுவட்டார ஊர்களுக்கும் பரவியது. அதனைக் கேள்விப்பட்ட செல்வநம்பிகள் என்ற வைணவ அறிஞர் மன்னனைக் காண விரும்பி அங்குச் சென்றார். அங்கே மன்னனுக்கு உன்னதமான பாகவத புராணத்தை உரைத்தார். அதைக் கேட்பவர்கள் சகல தீமைகளில் இருந்தும் காப்பாற்றப்படுவதோடு, இந்த தர்மநெறி எதிர்காலத்தில் அனைவராலும் அறியப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.இதனால் மனம் நெகிழ்ந்த மன்னன், இயற்கை எழில் மிக்க பெருங்கருணை திருத்தலத்தில் பெருமாளுக்குக் கற்றளியாகக் கோயில் ஒன்றை பாண்டிய நாட்டு கலைப்பாணியில் கட்டி வைத்தான். அந்நாளைய கொற்றவாள்குடி ஊரே இன்றைக்கும் பெருங்கருணைக்கு அருகே மருவி கொட்டகுடி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மதுரை நாயக்கர் ஆட்சியில் இக்கோயில் தினசரி பூஜை மற்றும் விழாச் செலவினங்களுக்குப் பல தானங்கள் தரப்பட்டன. அந்நாளைய கல்வெட்டிலும் ஊர்ப்பெயர் பெருங்கருணை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.ஊருக்கு மேற்கே அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயில் கிழக்குப் பார்த்தபடி, சாலக்கோபுர முகப்புடன் இரு சுற்றுகளுடன் அமைந்துள்ளது. பெரிய திருவடி சந்நிதி, பலிபீடம் ஆகியன முகமண்டபத்தில் காணப்படுகின்றன. மகாமண்டபத்தில் சேனை முதலி, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், செல்வ நம்பிகள், திருக்கோஷ்டியூர் நம்பிகள், ராமானுஜர் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. அர்த்த மண்டப வாசலில் துவாரபாலகர் உள்ளனர். கருவறை மூலவராக நின்ற கோலத்தில் பெருமாளும், ஸ்ரீதேவி, பூதேவி உபயநாச்சியார்களும் சேவை சாதிக்கின்றனர். மூலவர் திருமேனி வர்ணகலாப மூர்த்தியாக உள்ளபடியால் திருமஞ்சனம் கிடையாது. புஷ்ப அலங்காரம் நடைபெறுகிறது. உள்சுற்றில் பெருந்தேவி தாயார் மற்றும் ஆண்டாள் சந்நிதிகள் உள்ளன. தினமும் ஒரு காலபூஜை பாஞ்சராத்ர ஆகமப்படி நடைபெறுகிறது. பெரிய ஏரிபோன்று திருப்பாற்கடல் என்ற பெயரில் தீர்த்தக்குளம் உள்ளது. திருமணத்தடை விலக, குழந்தை பாக்கியம் கிட்ட எனப் பல்வேறு சுபகாரியங்களுக்குப் பரிகார தலமாக இக்கோயில் விளங்குகிறது. பருவ காலத்தில் போதுமான மழை பெய்து, குறைவிலா தானிய விளைச்சல் வேண்டி இப்பரந்தாமனிடம் ஊர்மக்கள் நம்பிக்கையோடு வேண்டிச் செல்கின்றனர். செல்வநம்பிகளின் திருநட்சத்திரம் ஆவணி பூசம் ஆகும். ஆண்டுதோறும் நான்கு நாள்கள் வெகு சிறப்பாக இவ்விழா நடைபெறும். அதுசமயம் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளியெழுச்சியும், நாலாயிர திவ்யபிரபந்த பாராயணமும் நடைபெறும். பவித்ரோற்சவமும் நடைபெறும். 2010}இல் எளிய முறையில் மகா சம்ப்ரோக்ஷணம் நிகழ்த்தப்பட்டது. தற்போது, பெரிய அளவில் அதை நடத்தி முடிப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இக்கோயில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தரிசனத்துக்காக காலை 10 மணி முதல் பகல் 11.30 மணி வரை திறந்திருக்கும் பெருங்கருணை வரதராஜப்பெருமாள் கோயில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி - பரமக்குடி நெடுஞ்சாலையில் சுமார் 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. - அருப்புக்கோட்டை வெ. கணேசன்