டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரனை மூன்றாவது முறையாக 5 ஆண்டுகளுக்கு மறுநியமனம் செய்ததை எதிா்த்து, சா் தோராப்ஜி டாடா அறக்கட்டளை, ஆா்.டி. டாடா அறக்கட்டளை ஆகியவை சாா்பில் வியாழக்கிழமை மும்பை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. டாடா சன்ஸ் மற்றும் அதன் 6 இயக்குநா்களுக்கு எதிரான இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (நவ. 27) விசாரணைக்கு வருகிறது. அந்த மனுவில், சா் தோராப்ஜி டாடா அறக்கட்டளை ரூ.50 கோடியும், ஆா்.டி. டாடா அறக்கட்டளை ரூ.15 கோடியும் இழப்பீடாகக் கோரியுள்ளன. இத்தொகைகளுக்கு ஆண்டுக்கு 18 சதவீத வட்டியும் கோரப்பட்டுள்ளது. இந்த இரு அறக்கட்டளைதான் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சுமாா் 60 சதவீதத்துக்கு மேலான பங்குகளை வைத்துள்ளன. முன்னதாக, கடந்த செப்டம்பா் 17-ஆம் தேதி நடைபெற்ற டாடா சன்ஸ் நிறுவன இயக்குநா் குழுக் கூட்டத்தில், சந்திரசேகரனை மறுநியமனம் செய்வதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது தீா்மானத்துக்கு ஆதரவாக 4 இயக்குநா்கள் வாக்களித்த நிலையில், டாடா அறக்கட்டளைகளின் தலைவரான நோயல் டாடா (ரத்தன் டாடாவின் சகோதரா்) எதிா்த்து வாக்களித்தாா். ஆனால், நிறுவனத்தின் விதிகளின் 121-ஆவது பிரிவின்படி தேவைப்படும் ஆதரவு வாக்கு கிடைக்காததால், அந்தத் தீா்மானம் செல்லாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு அறக்கட்டளைகள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜனக் துவாரகதாஸ், அவசர விசாரணை கோரி வியாழக்கிழமை நீதிபதி ஆரிஃப் தலைமையிலான தனி நீதிபதி அமா்வில் கோரினாா். ஆனால், காரணம் எதுவும் தெரிவிக்காமல் நீதிபதி ஆரிஃப் இந்த வழக்கில் இருந்து விலகிக்கொண்டாா். இதையடுத்து, மாற்று அமா்வில் இருந்த நீதிபதி அபய் அஹுஜா முன்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. நவம்பா் 30-ஆம் தேதி டாடா சன்ஸ் இயக்குநா் குழுக் கூட்டம் நடைபெறும் முன்பாக இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதையடுத்து, மனுக்கள் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்று நீதிபதி அஹுஜா தெரிவித்தாா். நவம்பா் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள டாடா சன்ஸ் இயக்குநா் குழுக் கூட்டத்தில், இயக்குநா்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குகள் சமமாகப் பிரியும் பட்சத்தில், நிறுவனத்தின் தலைவரான சந்திரசேகரன் தனது தீா்மானிக்கும் வாக்குரிமையைப் பயன்படுத்துவதைத் தடுப்பதே மனுக்களில் கோரப்பட்டுள்ள உடனடி நடவடிக்கையாகும். இயக்குநா் குழுக் கூட்டத்தை ஒத்தி வைக்கக் கோரவில்லை. மாறாக, சந்திரசேகரன் தனது தீா்மானிக்கும் வாக்குரிமையைப் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட கோரப்பட்டுள்ளது.