வேலூர்: காட்பாடி அருகே சொத்து தகராறு காரணமாக, மாற்றுத்திறனாளி இளைஞர் செவ்வாய்க்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக அவரது தம்பியைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த எல்.ஜி. புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (48). இவரது மனைவி பொன்னியம்மாள். இவர்களுக்கு தினகரன் (25), மயிலழகன் (23) என இரண்டு மகன்கள் உள்ளனர்.தினகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் தனது வலது கையை இழந்தார். இதனையடுத்து, குடும்பச் சொத்தான 12 ஏக்கர் நிலத்தைப் பிரித்தபோது, மாற்றுத்திறனாளியான தினகரனுக்கு 8 ஏக்கரும், இளைய மகன் மயிலழகனுக்கு 4 ஏக்கரும் ஒதுக்கப்பட்டது.இந்த பாகப்பிரிவினையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பெருமாளிடம் கோபித்துக் கொண்டு பொன்னியம்மாள் பிரிந்து சென்றுவிட்டார். மயிலழகனும் தனியாக வசித்து வருகிறார். தினகரன் தனது தந்தை பெருமாள் மற்றும் பாட்டி பச்சையம்மாளுடன் நிலத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.வலது கையை இழந்தபோதிலும் தன்னம்பிக்கையுடன் டிராக்டர், இருசக்கர வாகனங்களை ஓட்டுவதுடன், வரப்பு வெட்டுவது உள்ளிட்ட அனைத்து விவசாயப் பணிகளையும் தினகரன் தானே செய்து வந்தார். மேலும், மாநில நெடுஞ்சாலையை ஒட்டிய தனக்குச் சொந்தமான இடத்தில் புதிதாக 4 கடைகளைக் கட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளார்.புதிய கடைகளுக்குக் காவலாக இருக்க வேண்டும் என்பதற்காக, திங்கள்கிழமை இரவு பெருமாளும், பாட்டி பச்சையம்மாளும் கடைகளிலேயே படுத்து உறங்கினர். தினகரன் மட்டும் இரவு 10 மணியளவில் வீட்டிற்குச் சென்று தூங்கியுள்ளார்.செவ்வாய்க்கிழமை காலை வீட்டிற்கு வந்த பெருமாளும், பச்சையம்மாளும் உள்ளே சென்று பார்த்தபோது, தலையின் பின்பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் தினகரன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. அக்கம்பக்கத்தினர் இது குறித்து விருதம்பட்டு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், தினகரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கொலை நடந்த வீட்டிலிருந்து மோப்பம் பிடித்து ஓடிய நாய், சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள தினகரனின் தம்பி மயிலழகன் வீட்டின் முன்பு சென்று நின்றது.போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், மயிலழகன் தனக்கு ஒதுக்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்தை விற்று செலவழித்துவிட்டதாகவும், தற்போது புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4 கடைகளில் 2 கடைகளைத் தனக்குப் பிரித்துத் தருமாறு அண்ணன் தினகரனுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் மயிலழகனைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மாற்றுத்திறனாளி இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் எல்.ஜி. புதூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.