சபரிமலையில் புகையிலை, பான் மசாலா சம்பவங்கள் அதிகரிப்பு! அபராதமாக ரூ. 46,800 வசூல்

Wait 5 sec.

சபரிமலை அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புகையிலை பயன்படுத்தியது தொடர்பாக 12 நாள்களில் மொத்தம் ரூ. 46,800 வசூலிக்கப்பட்டுள்ளதாக கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சபரிமலை ஐயப்பன் கோயில் கார்த்திகை மாத மண்டல பூஜை நவ. 17 அன்று தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் குவிந்து வருகின்றனர். இந்தநிலையில், நவம்பர் 15 முதல் 26-ஆம் தேதி வரையிலான கலாகட்டத்தில் சிகரெட்டுகள் மற்றும் புகையிலை பொருள்கள் சட்டம் 2003-ன் கீழ், பொது இடங்களில் புகைபிடித்தல், குட்கா மற்றும் பாண் மசாலா பயன்படுத்தியது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. கடந்த 12 நாள்களில் புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறிய 234 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தம் ரூ. 46,800 அபராதம் விதித்துள்ளதாகக் கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.சபரிமலையில், கலால் துறையைச் சேர்ந்த மூன்று குழுக்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு வட்ட ஆய்வாளர், இரண்டு தடுப்பு அதிகாரிகள் மற்றும் ஏழு சிவில் கலால் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.இந்தக் குழுக்கள், யாத்திரை பாதைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்கள், முக்கிய பகுதிகளிலிருந்து தொலைவில் அமைந்துள்ள கடைகள் மற்றும் தொழிலாளர்கள் கூடும் இடங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த யாத்திரைக் காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மேலும், போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் போக்கும் குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சபரிமலை பகுதியில் மது மற்றும் போதைப்பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் இவற்றை உட்கொள்வது பிணையில் வெளிவர முடியாத குற்றமாகும்.