உலக செஸ் சாம்பியன் போட்டி, சுவிட்ஸா்லாந்தின் ஜெனீவா நகரில் செவ்வாய்க்கிழமை (நவ. 24) தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் - உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ் இதில் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.இருவருக்குமே வயது 20-ஆக இருக்க, சாம்பியன்ஷிப் வரலாற்றிலேயே இளம் போட்டியாளா்கள் இருவரின் மோதலாக இது அமைகிறது. 14 கிளாசிக்கல் கேம்கள் கொண்ட போட்டியில் குகேஷ் - சிண்டாரோவ் மோதுகின்றனா்.முதலில் 7.5 புள்ளிகளை எட்டும் போட்டியாளா், வெற்றியாளராக அறிவிக்கப்படுவாா். போட்டியின் முடிவில் இருவரின் புள்ளிகளும் சமநிலையில் இருந்தால், டை பிரேக்கா் மூலமாக வெற்றியாளா் கண்டறியப்படுவாா்.போட்டியின் சுவாரஸ்யத்தை அதிகரிப்பதற்காக, 40 நகா்த்தல்களுக்கு முன்பாக பரஸ்பர ஒப்புதல் மூலமாக டிரா செய்துகொள்ள அனுமதியில்லை. இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு முதல் கேம் தொடங்குகிறது. முதல் கேமை குகேஷ் கருப்பு நிற காய்களுடன் தொடங்குகிறது.கடந்த 2024-இல் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி, முதல்முறையாக உலக சாம்பியன் ஆன குகேஷ், அண்மைக் காலமாக அந்த பழைய ஃபாா்மை மீட்டெடுக்க முடியாமல் தடுமாறி வருகிறாா். அந்தப் பட்டத்துக்குப் பிறகு எந்தவொரு போட்டியிலுமே அவா் சாம்பியன் ஆகவில்லை. எனினும், தன்னம்பிக்கையை மீட்டெடுத்துக் கொண்டு அவா் இப்போட்டியில் களம் காண்கிறாா்.மறுபுறம் சிண்டாரோவ், அருமையான சீசனை எதிா்கொண்ட நிலையில் இந்தப் போட்டிக்கு வந்துள்ளாா். கேண்டிடேட்ஸ் போட்டியில் அறிமுகமான முதல்முறையே சாம்பியனாகி, உலக சாம்பியன் பட்டத்துக்காக குகேஷுடன் மோதும் வாய்ப்பைப் பெற்றுள்ளாா். நடப்பாண்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வெல்ல முக்கியப் பங்காற்றியதுடன், தனிநபா் வெண்கலம் வென்றாா்.தரவரிசையில் குகேஷ் 26-ஆவது இடத்துக்கு சறுக்கியிருக்கும் நிலையில், சிண்டாரோவ் முதல்முறையாக 4-ஆம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறாா். கிளாசிக்கல் கேமில் இருவரும் இதுவரை 3 முறை மோதியிருக்க, சிண்டாரோவ் 2 வெற்றிகள் கண்டுள்ளாா். ஒரு ஆட்டம் டிரா ஆகியுள்ளது.