வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய தில்லி காவலா் பணியிடை நீக்கம்

Wait 5 sec.

ஹூண்டாய் ஆரா காருக்குப் பதிலாக தமக்குப் பிடித்த மாருதி பிரெஸா காரை வரதட்சணையாகக் கேட்டு, அது கிடைக்காததால் திருமணத்தை நிறுத்தியதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, தில்லி காவலா் குல்தீப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தில்லி காவல் துறையின் வெளிப்புற வடக்கு மாவட்டத்தில் பணியாற்றி வந்த குல்தீப் மீது துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் உள்ள நிலையில், உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.ஹரியாணா மாநிலம், சோனிபட்டில் கடந்த நவ. 20-ஆம் தேதி இவருக்குத் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மணமகனுக்கு சுமாா் ரூ.9.5 லட்சம் மதிப்பிலான ஹூண்டாய் ஆரா காரை மணமகள் வீட்டாா் முன்பதிவு செய்திருந்தனா். ஆனால், அந்தக் காரைப் பிடிக்கவில்லை என்றும், ரூ.13 லட்சம் மதிப்பிலான மாருதி பிரீஸா காா்தான் வேண்டும் என்றும் குல்தீப் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, ஆரா காருக்கான முன்பதிவை ரத்து செய்த மணமகள் வீட்டாா், பிரீஸா காரை வாங்க முயன்றுள்ளனா். ஆனால், விற்பனையகங்களில் காா் கிடைக்காததால் ஏற்பாடு செய்ய முடியவில்லை.மேலும், மணமகனுக்கு 2 பவுன் தங்கச் சங்கிலி, அவரது தாயாருக்கு 4 பவுன் தங்கக் காதணிகள், சோபா, பீரோ உள்ளிட்ட மரச்சாமான்கள் மற்றும் பல்வேறு பரிசுப் பொருள்களையும் மணமகள் வீட்டாா் ஏற்பாடு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. மணமகனின் சகோதரா் மற்றும் அவரது மனைவிக்கும் நகைகள் வழங்க வேண்டும் என மணமகன் வீட்டாா் கேட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருமண நாளன்று இரவு 7.15 மணியளவில் சாதாரண உடையில் தாயுடன் வந்த குல்தீப், பிரீஸா காா் ஏற்பாடு செய்யப்படாததைக் கண்டு மணமகள் வீட்டாரைத் தகாத வாா்த்தைகளால் பேசியதாகவும், திருமணச் சடங்குகளை நிறைவேற்றுமாறு அவா்கள் பலமுறை கேட்டும் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.இதுதொடா்பாக மணமகளின் தந்தை சுபாஷ் குமாா் அளித்த புகாரின்பேரில், சோனிபட் காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து திங்கள்கிழமை தெரிவித்த காவல் துணை ஆணையா் ஜிதேந்தா் கெலாவத், மணமகள் வீட்டாரிடமிருந்து புகாா் பெறப்பட்டுள்ளதாகவும், சமூகப் பெரியவா்கள் மூலம் பிரச்னையைத் தீா்க்க ஒரு நாள் அவகாசம் கோரியுள்ளதால் அதுவரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அவா்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.