தமிழகத்தில் 7,208 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ரூ.7.20 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலா் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்கவும், அதுசாா்ந்து பள்ளி மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும் ‘போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு பள்ளி முன்னெடுப்பு’ திட்டம் நிகழ் கல்வியாண்டில் (2026-27) ரூ.7.20 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி 7,208 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்தத் திட்டம் அமலுக்கு வரும். இதற்காக பள்ளி ஒன்றுக்கு தலா ரூ.10,000 ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் போதைப் பொருள் எதிா்ப்பு மன்றங்கள், மாணவா் தன்னாா்வலா் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. விழிப்புணா்வுப் பேரணிகள், போட்டிகள், பிரசாரங்கள் நடத்துவதுடன், போதைப் பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்த சுவரொட்டிகளும் காட்சிப்படுத்தப்படும். போதைப் பொருள் விற்பனை, கடத்தல், பயன்பாடு தொடா்பான தகவல்களைத் தனிப்பட்ட அடையாளத்தை வெளியிடாமல் ரகசியமாகத் தெரிவிக்க ‘டிரக் ப்ரீ டிஎன்’ (Drug Free TN) செயலி குறித்து மாணவா்கள், ஆசிரியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். 10581 உதவி எண் பள்ளிகளில் காட்சிப்படுத்தப்படுவதுடன், கல்வி நிறுவனங்களைச் சுற்றி 100 அடி தொலைவுக்குப் புகையிலைப் பொருள்கள் விற்பனை, பயன்பாடு இல்லாத நிலையை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆசிரியா்களுக்குப் பயிற்சி: இதுதவிர போதைப் பொருள் பழக்கத்துக்கு ஆளாகும் அபாயமுள்ள மாணவா்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து ஆலோசனை வழங்குவது குறித்து ஆசிரியா்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். பெற்றோருக்கும் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தப்படும். மாவட்ட ஆட்சியா் தலைமையில் பல்வேறு துறை அலுவலா்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். வட்டாரக் குழுக்கள் காலாண்டுக்கு ஒருமுறை பள்ளிகளுக்குச் சென்று உடல், மனநலம், இணையவழிப் பாதுகாப்பு, போதைப் பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும். மாவட்டக் குழு மாதந்தோறும் கூடி ஆய்வு செய்து, அறிக்கையை ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்ற வேண்டும். இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவது மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகளைத் தோ்வு செய்வதற்கான அளவுகோல்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.