திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி மலை உச்சியில் பக்தர்கள் வெள்ளத்தில் அரோகரா கோஷம் முழங்க மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் தலமாகவும் விளங்கும் உண்ணாமுலை அம்மன் உடனுறை அருணாசலேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர்15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் காலையில் ஒவ்வொரு வாகனங்களில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.திருவிழாவின் ஏழாம் நாளான நவம்பர் 21-ஆம் தேதி விநாயகர் தேர் வடம் பிடித்தலும், தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் மகா தேரோட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்தும் விநாயகர், சந்திரசேகர், பஞ்சமூர்த்திகள் ஒவ்வொரு வாகனங்களில் புறப்பாடாகிக் காட்சியளித்தனர்.மகா தீபத் திருவிழாவையொட்டி தீபம் ஏற்றப்படும் கொப்பரை 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு திங்கள்கிழமை கொண்டு செல்லப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 10-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மகா தீபத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, அருணாசலேசுவரர் கோயில் சுவாமி சன்னதி எதிரில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஏகன், அநேகன் தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைத்து, பஞ்சபூதங்களும் தாமே என்பதை இறைவன் எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கோயில் பிரம்ம தீர்த்தக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற்றது. பின்னர், தங்கக் கொடிமரம் முன் தீப தரிசன மண்டபத்தில் மாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.அதன் பின்னர், ஆணும், பெண்ணும் சமம் என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்த, உமையவளுக்குத் தனது இடபாகத்தை அளித்து, அர்த்தநாரீசுவரராக அருணாசலேசுவரர் எழுந்தருளினார். ஆண்டுக்கு ஒருமுறை சில நிமிஷங்கள் மட்டுமே காட்சியளிக்கும் அர்த்தநாரீசவரர் ஆனந்ததாண்டவமாடி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.இதைத் தொடர்ந்து தங்கக் கொடிமரம் முன் அகண்டத்தில் தீபச்சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மலையே மகேசன் எனப் போற்றி வணங்கப்படும் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத் திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். மலை உச்சியில் ஏற்பட்ட தீபக் கொப்பரையில் 4,500 கிலோ நெய் மற்றும் 1,000 மீட்டர் காடா துணி கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. 48 நாள்கள் விரதம் இருந்து பருவத ராஜகுல மக்கள் மலையின் உச்சியில் தீபத்தை ஏற்றினர். மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து வீடுகளிலும் தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர்.சுற்றுப்புறத்திலுள்ள மக்கள் வழிபடுவதற்காக தொடர்ந்து 11 நாள்களுக்கு மகா தீபம் எரியும். சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சியளித்ததால், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, சுமார் 30 லட்சம் பக்தர்கள் குவிந்து இருப்பதால், திருவண்ணாமலை நகரமே பக்தர்களால் நிரம்பி வழிகிறது.திருப்பரங்குன்றம்: உத்தரவை செயல்படுத்த வேண்டும்- மதுரைக் கிளை! - நேரலை!!