26/11 மும்பை தாக்குதலைப் போன்று 300 பேரை கொல்லத் திட்டம்: லஷ்கர்-இ-தொய்பா மிரட்டலா?

Wait 5 sec.

26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களைப் போன்று மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தப்போவதாக ஹைதராபாத் காவல்துறைக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. தாக்குதலில் குறைந்தது 300 பேரைக் கொல்லப்போவதாக வந்த மிரட்டலைத் தொடர்ந்து தெலங்கானா காவல்துறையினர் தீவிர எச்சரிக்கை நிலையில் உள்ளனர். 'லஷ்கர்-இ-தொய்பா' பயங்கரவாத அமைப்பின் பெயரில் அதிகாரிகளுக்கு வந்த மின்னஞ்சலில், தாங்கள் குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கச்சிகுடா பகுதியில் உள்ள 'ஹோட்டல் டூரிஸ்ட் பிளாசா' மற்றும் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி குறைந்தது 300 பேரைக் கொல்லப்போவதாக அதில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தால் அந்த அமைப்பின் தலைவர் லத்தீஃப் பட் மற்றும் பலர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக 2008-ல் நவ. 26 அன்று மும்பையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதேபோன்று ஹைதராபாத்திலும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து ஹைதராபாத் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஹைதராபாத் காவல் ஆணையர் மகேஷ் முரளிதர் பகவத் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம் என்றும் பதற்றமடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஹைதராபாத்தில் சந்தேகத்திற்குரிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு சோதனைகள் நடத்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. மின்னஞ்சல் அனுப்பியவர்களைக் கண்டறியும் முயற்சியில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது உரிமையாளர் இல்லாத பொருள் ஏதையேனும் கண்டால் உடனடியாக 112 என்ற எண்ணிற்கு அழைத்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராணுவப் பயிற்சியின் போது பீரங்கி ஏறி இரு வீரர்கள் பலி!Hyderabad Police received an email warning of another attack similar to the 26/11 Mumbai terror attacks.