முன்னணி மின்வணிக நிறுவனமான ஃபிளிப்கார்ட்டின் தலைமை செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.வால்மார்ட்டுக்குச் சொந்தமான ஃபிளிப்கார்ட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக கடந்த 2017 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, பின்னர், 2018-ல் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.கடந்த 11 ஆண்டுகளாக ஃபிளிப்காட்டின் மின் வணிகம், நிதித் தொழில்நுட்பம், மளிகை ஆகிய துறைகளில் நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கு அவர் முக்கியப் பங்காற்றினார்.ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் இணைவதற்கு முன்னதாக, டைகர் குளோபல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக கல்யாண் கிருஷ்ணமூர்த்தி பணியாற்றினார்.இந்த நிலையில், கல்யாண் கிருஷ்ணமூர்த்திக்குப் பிறகு, தற்போதைய தலைமை தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப அதிகாரியான பாலாஜி தியாகராஜன் நிறுவனத்தை தற்காலிகமாக வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், கல்யாண் கிருஷ்ணமூர்த்தியின் ராஜிநாமாவுக்கான காரணத்தை ஃபிளிப்கார்ட் நிறுவனம் வெளியிடவில்லை.இந்தியாவின் மிகப்பெரிய மின்-வணிகத் தளங்களில் ஒன்றான ஃபிளிப்கார்ட் நிறுவனம், 50 கோடிக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது.பிளிப்கார்ட் நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்தத் தலைமை மாற்றம் நிகழ்ந்துள்ளது. கல்யாண் கிருஷ்ணமூர்த்திக்குப் பதிலாக நிரந்தரமாகப் பொறுப்பேற்கப்போவது யார் என்பதை அந்நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.Flipkart CEO Kalyan Krishnamurthy resigns!ஐபிஎல் மினி ஏலத்தில் சேவாக் மகன் ஆர்யவீர்!