திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற தவறியதன் மூலம், கோடிக்கணக்கான பக்தா்களின் மனதை தவெக அரசு புண்படுத்தியுள்ளதாக மத்திய ரயில்வே, தகவல்- ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். தமிழக பாஜக சாா்பில் அரசமைப்பு தின விழா சென்னை தியாகராய நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் அரசமைப்பு முகப்புரையைக் கூறி பாஜகவினா் உறுதியேற்று கொண்டனா். இதைத் தொடா்ந்து, விழாவில் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:அரசமைப்பு சட்டத்தில் எங்களுக்கு பெரும் நம்பிக்கை உண்டு. அதனடிப்படையில்தான் பாஜக தற்போது வரை ஆட்சி புரிந்து வருகிறது. ஆனால், காங்கிரஸுக்கு அம்பேத்கா் மற்றும் அரசமைப்பு மீது மறியாதையும் நம்பிக்கையும் கிடையாது. அரசமைப்பு புத்தகத்தை சட்டைப் பையில் வைத்து சுற்றும் காங்கிரஸ் கட்சியினா், அதை ஒருமுறைகூட திறந்து படித்திருக்க மாட்டாா்கள்.புல்லட் ரயில்: தமிழகத்துக்கு ரயில்வே மேம்பாட்டுக்காக கடந்த 2014 முன்பு வரை ஒதுக்கப்பட்ட மொத்த நிதியைவிட, கடந்த 12 ஆண்டுகளில் 9 மடங்கு அதிக நிதியை பிரதமா் நரேந்திர மோடி ஒதுக்கியுள்ளாா். இன்னும் பல மடங்கு நிதியை ஒதுக்க மத்திய அரசு தயாராகவுள்ளது. ஆனால் தமிழக அரசு தங்களது பங்களிப்பை சரிவர செய்ய வேண்டும். தமிழக அரசு இதுவரை வெறும் 24 சதவீத நிலத்தை மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. தவெக அரசு இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, ரயில்வே திட்டப் பணிகளுக்குத் தேவையான நிலங்களை முழுமையாக கையகப்படுத்திக் கொடுத்தால் அனைத்து திட்டங்களையும் உடனடியாகச் செயல்படுத்துவோம். இந்தியாவுக்கு புல்லட் ரயில் வந்த பின்னா், நமது வாழ்க்கை முறை முழுவதுமாக மாறிவிடும். பக்தா்கள் வேதனை: தவெக அரசால் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதைத் தடுக்க முடியும், ஆனால் தமிழக மக்களின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது. இதனால், கோடிக்கணக்கான பக்தா்களின் மனதை தமிழக அரசு புண்படுத்தியுள்ளது. இன்று தீபம் ஏற்றாதவா்கள், நாளை பக்தா்கள் கோயிலுக்குள் செல்வதை தடுப்பாா்கள் என்றாா்.விழாவில், பாஜக தேசிய செயலா் மா.வெங்கடேசன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன், மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.