கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் நேரில் ஆஜராக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதை ஆட்சியர் மறுக்காத நிலையில், எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்தன.சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் இருந்து உரிய புகார் வராததால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என காவல் துறை தெரிவித்தது. எம்எல்ஏ அருள் விக்னேஷும் எந்த ஆபாச குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை என்று மறுத்துவந்தார்.தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்ஆப் எண்ணிலிருந்து ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக தகவல்கள் வெளியான நிலையில், வழக்குரைஞர் ஆர். திரிசூலி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கருத்துகளைக் கேட்டு விளக்கம் அளிக்கும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டது.இதையடுத்து, நவ. 23-ஆம் தேதி, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அருள் விக்னேஷ் எம்எல்ஏ மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர் மீது பிணையில் வெளிவர முடியாத 3 பிரிவுகள் மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சியில் உள்ள எம்எல்ஏ வீட்டுக்குச் சென்று செவ்வாய்க்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ. ஷாநாஸின் தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ்வரன் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இன்று (நவ. 25) காலை எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டுக்கு வந்த ஆய்வாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட காவலர்கள் வருகை தந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து, அருள் விக்னேஷிடம் ஆய்வாளர் புவனேஸ்வரி விசாரணை நடத்தி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனை நேரில் வழங்கினார்.காவல்துறையினர் ஆதாரங்களைத் திரட்டி வரும் நிலையில், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், கட்சித் தலைமை, அரசியல் அழுத்தங்கள் காரணமாக அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.The police have issued a summons to TVK MLA Arul Vignesh, requiring him to appear in person in connection with a case involving the sending of an obscene text message to the female District Collector of Kallakurichi.