தமிழ்த் திரையுலகில் கம்பரின் தாசன்! கண்ணதாசன் நூற்றாண்டுத் தொடர் - 23

Wait 5 sec.

பெண்களின் கூந்தலை மழைமேகத்துக்கு ஒப்பிடுவது இலக்கியங்களில் இயல்புதான்.திரைப் பாடல்களிலும் பலமுறை பெண்களின் கார்கூந்தல் மேகமாகியிருக்கிறது. கூந்தலுக்குள் மேகம் வந்து குடிபுகவும் செய்திருக்கிறது.கவியரசர் கண்ணதாசன், அவரது 'மாலையிட்ட மங்கை' (1958) திரைப்படத்தில் எழுதிய ‘செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்’ என்ற பாடலில், ‘மேகத்தை கூந்தலில் முடித்தவளோ விண்மீன்களை மலராய் அணிந்தவளோ?’ என எழுதியிருப்பார்.1966இல் வெளிவந்த 'இரு வல்லவர்கள்' திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல், ‘நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்’. அந்தப் பாடலில் வரும் ஒரு வரி. ‘என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக, நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற.’‘என் அண்ணன்’ (1970) என்ற திரைப்படத்தில் இன்னொரு பாடல். ‘நீலநிறம், வானுக்கும் கடலுக்கும் நீலநிறம். காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ?’ என்று அந்தப் பாடல் தொடங்கும். அந்தப் பாடலில், ‘அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ?’ என கதாநாயகன் கேட்க, ‘உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ?’ என்று திருப்பிக் கேட்பாள் கதாநாயகி. இந்தப் பாடலையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்தான்.1978இல் வெளிவந்த திரைப்படம் அந்தமான் காதலி. அந்தத் திரைப்படத்தில், கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல், ‘அந்த மானைப் பாருங்கள் அழகு’. அந்தப் பாடலில் வலம்வந்த ஒரு வரி, ‘உந்தன் மேகக் கூந்தல் கலைகள், கடல்நீரில் ஆடும் அலைகள்’.எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததுபோல, பாலநாகம்மா (1981) என்ற திரைப்படத்தில் பாடல் எழுதிய கவியரசர் கண்ணதாசன், ‘கூந்தலிலே மேகம் வந்து குடிபுகுந்தாளோ கவி எழுத’ என்றும் எழுதி மகிழ்ந்தார். நம்மை மகிழ்வித்தார்.*கம்பராமாயணத்தில் கனிந்து ஊறியவர் கவியரசர் கண்ணதாசன். கம்பனின் கவியழகு கவியரசரின் திரைப்பாடல்கள் பலவற்றில் தெறிப்பது வழக்கம்.‘நதியின் பிழையன்று நறும்புனலின்மை’ என்பது கம்பரின் கற்கண்டு கவிதை வரிகளில் ஒன்று. அதைத்தான், தியாகம் (1978) என்ற திரைப்படத்தில் வரும் ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு ஒன்று மனசாட்சி’ என்ற பாடலில், ‘நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றமில்லை, விதி செய்த குற்றமன்றி வேறு யாரம்மா?’ என திரைப்பாடல் வரிகளாக்கினார் கவியரசர்.கம்பராமாயணத்தில் வரும் இன்னொரு பாடல்.‘இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக் கெல்லாம் உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர் வண்ணம் உறுவது உண்டோ? மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன் கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன்‘ கம்பரின் காவியச் சுவை மிக்க பாடல் இது.இந்த பாடலை அகத்தூண்டுதலாகக் கொண்டு பாசம் (1962) என்ற திரைப்படத்தில், ‘பால்வண்ணம் பருவம் கண்டு, வேல்வண்ணம் விழிகள் கண்டு, மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்’ என்று பாடலாக்கினார் கவியரசர். கம்பராமாயணத்தில், ராமனின் முடிசூட்டுப்படலம் நடைபெற இருந்த வேளையில் அயோத்தி மாநகரமே மகிழ்ச்சியில் மிதந்தது. ராமருக்குப் பட்டம் சூட்டப்போவதை எண்ணி எண்ணி தாய் கோசலை பூரித்ததைப்போல அயோத்தியில் முதிர்ந்த வயது பெண்கள் எல்லாம், ஏதோ தங்கள் மகனுக்கே நாளை முடிசூட்டு விழா என்பது போல மனம் மகிழ்ந்து போனார்களாம்.அயோத்தியைச் சேர்ந்த வேதியர்கள் வசிட்ட முனிவரின் மனநிலையில் மகிழ்ச்சியில் இருந்தார்களாம். இளம்வயது பெண்கள் எல்லாம் சீதையின் மனநிலையை ஒத்து புன்னகைப் பூத்தபடி இருந்தார்களாம். அந்தப் பாடல்,‘மாதர்கள் வயதின் மிக்கார் கோசலை மனதை ஒத்தார் வேதியர் வசிட்டன் ஒத்தார்..’கம்பரின் இந்த கவியழகை, ‘நெஞ்சிருக்கும் வரை’ (1967) படத்தில் இடம்பெற்ற ‘பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி‘ என்ற பாடலில் பக்குவமாகப் பயன்படுத்திக் கொண்டார் கவியரசர்.அதில் வரும் வரிகள், ‘மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க, மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க’ கம்பரின் கம்பராமாயண வரிகளை அடியொற்றி கவியரசர் உருவாக்கிய அழகு வரி இது.'இதயகமலம்' படத்தில் கவியரசர் கண்ணதாசனின் கைவண்ணத்தில் வந்த ஒரு பாடல். ‘தோள் கண்டேன் தோளே கண்டேன், தோளில் இரு கிளிகள் கண்டேன், வாள் கண்டேன் வாளே கண்டேன், வட்டமிடும் விழிகள் கண்டேன்’. இந்தப் பாடல் கம்பராமாயணத்தில் வரும், ‘தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே’ என்ற பாடலின் தாக்கத்தால் பிறந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.கம்பராமாயணத்தில், சீதைக்கு இடை என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் கம்பருக்கு வந்திருக்கும்.‘வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின் மறையபொய்யே எனும் இடையாளொடும், இளையானொடும் போனான்’ என்று எழுதியிருப்பார் கம்பர். அதில், பொய்யோ என நினைக்க வைக்கும் அளவுக்கு சீதை இல்லாத இடைகொண்டவள் என்பது கம்பரின் கற்பனை.கவியரசர் கம்பனின் இந்த கவிச்சுவையை, ‘தாயைக் காத்த தனயன் (1962) என்ற திரைப்படத்தில் வரும், ‘மூடித் திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன. முந்தானை காற்றில் ஆடி வா வா என்றது’ என்ற பாடலில் கண்ணதாசன் அழகுற கையாண்டிருப்பார். அந்தப் பாடலில், ‘அன்னப் பொடிநடை முன்னும் பின்னும் ஐயோ! ஐயோ! என்றது, வண்ணக் கொடியிடை கண்ணில் விழுந்து மெய்யோ பொய்யோ என்றது’ என கம்பரின் பாணியில் சொற்சிலம்பம் சுழற்றியிருப்பார் கவியரசர். இப்போது இன்னொரு பாடலுக்கு வருவோம்.‘இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க’ என்பது சோழன் மகள் அமராவதியை பார்த்த ஆர்வத்தில் கம்பரின் மகன் அம்பிகாபதி உதிர்த்த வரிகளாகக் கருதப்படுகின்றன. இந்த இலக்கியச் சுவை மிக்க வரிகளையும் கவியரசர் கண்ணதாசன் விட்டு வைக்கவில்லை. 1979இல் வெளிவந்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தில், ‘சோழனின் மகளே வா, சுந்தரத் தமிழே வா’ என்ற பாடலில், ‘இட்டஅடி நோக எடுத்த அடி கொப்பளிக்க ஏந்திழை வரவில்லையோ? யாழிசை தனை மிஞ்சும் ஏழிசை குரலாலே காவியம் தரவில்லையோ’ என்று இடம்பெறச் செய்தார் கவியரசர்.இதுபோன்ற பாடல் வரிகளின் மூலம் கம்பரின் கைவண்ணத்துடன் சேர்ந்து கவியரசரின் கைவண்ணமும் அல்லவா மிளிர்கிறது? தமிழ்த்திரையுலகில் கவியரசர் கண்ணதாசனுக்கும் முன்பு, கம்பதாசன் என்ற திரைப்படப் பாடலாசிரியர் ஒருவர் இருந்தார். ‘நான்’ என்ற திரைப்படத்தில் வரும் ‘கல்யாண ஊர்வலம் வரும் உல்லாசமே தரும்’, ‘மின்னல் போல் ஆகும் இந்த வாழ்க்கையே’ என்பன போன்ற பல திரைப்பாடல்களை எழுதியவர் அவர். ஆனால், நிஜத்தில் தமிழ்த் திரையுலகில் கம்பதாசன் என்று அழைக்கப்பட வேண்டியவர் கவியரசர் கண்ணதாசன்தான். காரணம், என்ன என்பது உங்களுக்கே இப்போது தெரிந்திருக்கும்.*‘கவலையில்லாத மனிதன்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தார் கவியரசர் கண்ணதாசன். அந்தப்படம் அவரை கவலையுள்ள மனிதனாக மாற்றியது. அப்படி கவலையுள்ள மனிதனாக கவியரசர் மாற, அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த ஜே.பி. சந்திரபாபுவும் ஒரு காரணம். உரியநேரத்தில் படப்பிடிப்புக்கு வராமல் இழுத்தடித்து அவர் காலம் கடத்தியது, கவலையில்லாத மனிதன் படத்தின் தோல்விக்கு ஒரு முதன்மை காரணமாக மாறியது.‘பிறக்கும் போதும் அழுகின்றாய், இறக்கும் போதும் அழுகின்றாய், ஒருநாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே’ என்று அந்தப் படத்தில் பாட்டெழுதி தன்னைத்தானே தேற்றிக் கொண்டார் கண்ணதாசன்.அதே ஜே.பி. சந்திரபாபு 1966 ஆம் ஆண்டு 'தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற திரைப்படத்தை நடித்து, இயக்கி, உருவாக்கியபோது அதில் பாடல் எழுதியவர் கண்ணதாசன்தான்.‘கண்மணி பப்பா, கோழி பிறந்தது முட்டையில்தான் என்று சொன்னது தப்பா?’ என்ற தத்துவப் பாடலில், ‘சட்டியில் இருப்பது அகப்பையிலே. புத்தியில் இருப்பது வார்த்தையிலே, போட்டதுதானே விளையும் அறிவுத் தோட்டத்திலே? மந்தையில் மேயும் வெள்ளாடு, சந்தைக்கு வந்தா சாப்பாடு, சாப்பிட்ட பிறகு கூப்பிட்டுப் பார்த்தா திரும்பாது, துள்ளும் மீன்கள் கடலோடு, தூங்கிய பின்னே கழுகோடு’ என்று தத்துவப் பிழிவுகளைத் தாறுமாறாக இறைத்தார் கவியரசர். இதன்மூலம் சந்திரபாபுவுக்கு மட்டுமின்றி, தனக்கும் அந்தப் பாடல் மூலம் அறிவுரை சொல்லியிருப்பார் கவியரசர்.*அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலில் மூன்றாம் பால் மீது கவியசருக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு. அவரது திரைப்பாடல்களில் இலைமறைவு காய் மறைவாக அது எப்போதும் தெறிக்கும். விவேக சிந்தாமணியில் ஒரு பாடல்.பள்ளியறையில் கணவனைக் கட்டித்தழுவியபடி படுத்திருந்த ஒரு பெண்ணுக்குத் திடீரென ஒரு சந்தேகம் வந்துவிட்டது. தன் கூரிய மார்புகள் கணவனின் மார்பு மீதில் பதிந்திருப்பதால் அவை கணவனின் மார்பைத் துளைத்து மறுபக்கம் முதுகு வழியாக வந்து விட்டதோ என்ற சந்தேகம் அது. அதனால் கணவனின் முதுகைத் தடவிப் பார்த்தாளாம் அந்தக் காரிகை.அந்தப் பாடல்…‘துப்புறச் சிவந்த வாயாள் தூய பஞ்சணையின் மீதே / ஒப்புறக் கணவனோடே ஓர்லீலை செய்யும் போது / கற்பகம் சேர்ந்த மார்பில் கனதனம் இரண்டும் தைத்தே / அப்புறம் உருவிற்று என்றே அங்கையால் தடவிப் பார்த்தாள்’ இந்தப் பாடலை அடியொற்றி கவியரசர் கண்ணதாசன் ஒரு திரைப்பாடலை எழுதினார்.படம்: பாட்டும் பரதமும் (1975). பாடல்: ‘மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்’. அந்தப் பாடலில் இடம்பிடித்த வரிகள். ‘ஏவிய கணைகள் இருபுறம் தாக்க, ஏலத்துப் பூங்குழல் வானத்தைப் பார்க்க,ஆவியில் ஆவியை ஆண்டவன் சேர்க்க, ஆனந்தம் நான் கொள்ள யாரிடம் கேட்க?ஏவிய கணைகள் என்பது இங்கே கண்களைக் குறிப்பிடுவது போலத் தோன்றினாலும் கவியரசர் மறைமுகமாகக் குறிப்பிடுவது வேறு ஏதோ இரண்டைத்தான்.கவியரசர் எப்போதும் கவியரசர்தான். Kambarin Dasan in Tamil cinema: Kannadasan Centenary Series - 23கவியரசர் என் காவலர்! - கண்ணதாசன் நூற்றாண்டுத் தொடர் - 22