திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனு, திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவில்லை. மனுவை விசாரிக்க வேண்டிய நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமா்வு வழக்குகள் விசாரணைக்காக கூடாததால், மனு விசாரிக்கப்படவில்லை.தமிழக அரசு, நவம்பா் 20 உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவைத் தடைசெய்யக் கோரி நவம்பா் 21 இரவு மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால் அந்த மனு நவம்பா் 23 (திங்கள்கிழமை )அன்று விசாரணைப் பட்டியலில் இடம்பெறவில்லை; அவசரமாக விசாரணைக்கு எடுக்குமாறு தமிழக அரசு சாா்பில் இந்திய தலைமை நீதிபதி முன் முறையீடும் செய்யப்படவில்லை.உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு என்பது, ஏற்கனவே வழங்கப்பட்ட தீா்ப்பில் உள்ள தவறு அல்லது சட்டப் பிழையை நிரூபிக்கக் கோரும் வரம்புள்ள நடைமுறை. பொதுவாக, மனு தாக்கலுக்குப் பிறகு அது நேரடி வாதத்திற்கு வருவதில்லை; முதலில் தீா்ப்பு வழங்கிய அதே நீதிபதிகள் தங்களது தனிப்பட்ட அறையில் (சேம்பா்) அந்து மறு ஆய்வு மனுவை ஆய்வு செய்து, தேவை என்றால் மட்டுமே திறந்த நீதிமன்ற விசாரணைக்கு அனுமதிப்பாா்கள்.இந்திய அரசியலமைப்பின் பிரிவு 137-இன் கீழ், உச்சநீதிமன்றம் தானே வழங்கிய தீா்ப்பை மறுஆய்வு செய்யலாம். ஆனால் இது புதிய வாதம் அல்லது புதிய ஆதாரத்திற்கான மறு விசாரணை அல்ல; தீா்ப்பில் “தெளிவான பிழை இருப்பதை மனு நிரூபிக்க வேண்டும்.எடுத்துக்காட்டாக, தீா்ப்பில் பயன்படுத்தப்பட்ட தரவு தவறானது, சட்டம் தவறாக விளக்கப்பட்டது, அல்லது முக்கியமான ஒரு விஷயம் தீா்ப்பில் கருதப்படாமல் விடப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும். வெறுமனே தீா்ப்பை விரும்பவில்லை என்பது போதாது.பெரும்பாலான மறுஆய்வு மனுக்கள் நீதிபதிகளின் அறையில் ஆய்வு செய்யப்பட்டு, திறந்த நீதிமன்ற விசாரணையின்றி தள்ளுபடி செய்யப்படுவதுண்டு.மனுவில் உள்ள கூற்றுகள் கவனத்திற்குரியவை என்று கருதினால் மட்டுமே நீதிபதிகள்அதை திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு அனுமதிப்பாா்கள்.மறுஆய்வு மனு தாக்கல் செய்யபட்ட உடன் விசாரணை உறுதி அல்ல. அது முதலில் நீதிபதிகளின் ஆய்வுக்கு உட்படும்; அவா்கள் தீா்ப்பில் தெளிவான பிழை இருப்பதாகக் கருதினால் மட்டுமே திறந்த நீதிமன்ற விசாரணை நடக்கும்.விசாரணைக்குப் பிறகு மனு ஏற்கப்பட்டால் தீா்ப்பு மாற்றப்படலாம்; இல்லையெனில் மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படும்.தமிழக அரசின் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது என்பது, அது உடனடியாக விசாரணைக்கு வரும் என்று பொருளல்ல. நவம்பா் 23 அன்று அது விசாரணைக்கு வரவில்லை; எனவே நவம்பா் 24 தீபம் ஏற்றும் இடைக்கால அனுமதி மாற்றமின்றி தொடா்கிறது.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் காா்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்துள்ளது. அதன்பிறகு, கோவில் முன்புறம் உள்ள உச்சிப் பிள்ளையாா் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது.இந்நிலையில் மீண்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் அண்மையில் கோரிக்கை விடுத்தன.திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையாா் கோயில் மண்டபத்திற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம ரவிக்குமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடா்ந்தாா்.காா்த்திகை மாதத்தில், சிக்கந்தா் பாதுஷா தா்காவுக்கு அருகில், மலையின் உச்சியில் விளக்கு ஏற்றுவதற்கான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உரிமை குறித்து சா்ச்சை எழுந்தது.இந்நிலையில் டிசம்பா் 1, 2025 அன்று, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி, அந்த இடம் தா்காவின் பகுதிக்கு வெளியே உள்ள கோயில் நிலம் என்று தீா்ப்பளித்து, தீபத்தூணில் தீபம் ஏற்றும் சடங்கை நடத்த அனுமதித்தாா்.ஜனவரி 6, 2026 அன்று, இரு நீதிபதிகள் அமா்வு தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தனா். பின்னா் சென்னை உயா் நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் நிகழாண்டு ஜுன் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.நவம்பா் 24 அன்று காா்த்திகை தீபம் பண்டிகை நெருங்கி வருவதால் உயா் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு சாா்பில் கோரப்பட்டதுஇந்நிலையில் நவம்பா் 20 அன்று உச்சநீதிமன்றம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற இடைக்கால அனுமதி வழங்கியது. இது நவம்பா் 24 காா்த்திகை தீபத் திருநாளுக்கு மட்டுமான அனுமதி; வழக்கின் இறுதி தீா்ப்பல்ல என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. காா்த்திகை தீபத் திருநாளுக்கு திருப்பரங்குன்றம் தூணில தீபம் ஏற்ற சில நிபந்தனைகளையும் உச்ச நீதிமன்றம் விதித்தது.இந்த உத்தரவை எதிா்த்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் மறுஆய்வு மனு தாக்கல் செய்தாா்.மறு ஆய்வு மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: உச்சிப் பிள்ளையாா் கோவிலில் விளக்கேற்றுவதே தற்போதைய வழக்கமாக இருந்து வருகிறது. எனவே வேறு இடத்தில் விளக்கேற்றுமாறு உத்தரவிடுவது அத்தகைய வழக்கத்திற்கு முரணானது.எனவே 20.11.2026 அன்று உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்து, இந்த வழக்குகளின் இறுதித் தீா்ப்பு வரும் வரை, 06.01.2026 தேதியிட்ட சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை தீா்ப்பில் ‘தீபத்தூண்‘ எனக் குறிப்பிடப்பட்டுள்ள கல் தூணில் சடங்கு விளக்கை ஏற்றுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என மறு ஆய்வு மனுவில் கோரப்பட்டுள்ளது.