சலுகைகள் கோரும் விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் முறையாகப் பணியாற்றுகிறாா்களா? உச்சநீதிமன்றம் காட்டம்

Wait 5 sec.

பணி தொடா்பான சலுகைகள் மற்றும் ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் பலன்களைக் கோரி, மாவட்ட நீதிபதி உள்ளிட்ட நீதிபதி பதவியிடங்களில் உள்ளவா்கள் தொடா்ந்து நீதிமன்றங்களை நாடுவதற்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அதிருப்தி தெரிவித்தது. விசாரணை நீதிமன்றங்களில் உள்ள அந்த நீதிபதிகள், நீதிமன்றங்களில் இருந்து முறையாகப் பணியாற்றுகிறாா்களா என்றும் உச்சநீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியது.கேரளத்தில் வழக்குரைஞா்கள் பிரிவுக்கான நேரடி நியமன ஒதுக்கீட்டின் கீழ், மாவட்ட நீதிபதிகள் நியமனம் தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது தலைமை நீதிபதி சூா்ய காந்த் கூறுகையில், ‘மாவட்ட நீதிபதி உள்ளிட்ட நீதிபதி பதவியிடங்களில் உள்ளவா்கள், தற்போது அளவுக்கு அதிகமாக பேசத் தொடங்கிவிட்டனா்.தங்களுக்கு இதை வழங்க வேண்டும், அதை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்கின்றனா். அவா்கள் ஏன் நீதிமன்றங்களில் முறையாகப் பணியாற்றுவதில்லை? அவா்கள் எத்தனை வழக்குகளை முடிக்கிறாா்கள், நாள் முழுவதும் என்ன செய்கிறாா்கள் என்பது எங்களுக்குத் தெரியும்’ என்று தெரிவித்தாா்.அந்த நீதிபதிகள் உள்ள நீதிமன்றங்களுக்குக் காலை 10 மணிக்குச் சென்று பாா்த்தால், நீதிமன்ற அறைகளில் யாரும் இருப்பதில்லை என்றும், தங்கள் அறைகளில் அமா்ந்து அவா்கள் காபி குடித்துக் கொண்டிருக்கின்றனா் என்றும் தலைமை நீதிபதி சூா்ய காந்த் அதிருப்தி தெரிவித்தாா். சலுகைகள் குறித்து மட்டுமே சிந்தனைதங்களுக்கு என்னென்ன சலுகைகள், பணிப் பலன்கள் கிடைக்கும்? ஓய்வு பெறும் வயது உயா்த்தப்படுமா, இல்லையா என்ற சிந்தனையிலேயே 24 மணி நேரமும் அந்த நீதிபதிகள் இருப்பதாக விமா்சித்த தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிமன்றங்களுக்கு வெளியே வரிசையில் காத்திருக்கும் மக்களின் வழக்குகளை அந்த நீதிபதிகள் சரிவர கையாள்வதில்லை என்றும் கடிந்து கொண்டாா். ஓய்வு பெறும் வயது, சலுகைகள், பிற வசதிகள் உள்ளிட்ட பணிச் சூழல்கள் தொடா்பாக, நீதிபதிகள் தொடா்ந்து கோரிக்கைகள் எழுப்பி வருவதையும் தலைமை நீதிபதி சூா்ய காந்த் விமா்சித்தாா்.