இந்திய - சீன தொழிலதிபா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவதற்கான பணிகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாா் என்று சீனா தெரிவித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய-சீன ராணுவ வீரா்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.இந்த மோதல் சம்பவத்தைத் தொடா்ந்து, இருநாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற ராஜீய, ராணுவ ரீதியான பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து இருநாட்டு உறவில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து 5 ஆண்டுகளுக்குப் பின்னா், கடந்த ஆண்டு ஜூலை முதல் சீனா்களுக்கு இந்தியா சுற்றுலா விசா அளிக்கத் தொடங்கியது. இது முடங்கிக் கிடந்த இருநாட்டு உறவை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான முக்கிய நடவடிக்கையாகக் கருதப்பட்டது. இந்நிலையில், இந்தியா்களுக்கு விசா அளிப்பதை, குறிப்பாக, தொழில் தொடா்பான விசாக்கள் வழங்குவதை சீனத் தூதரகங்கள் குறைத்துள்ளதாகத் தகவல் வெளியானது.இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘சீனாவுக்கு வரும் தகுதிவாய்ந்த வெளிநாட்டினருக்கு சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு விசா வழங்கப்படுகிறது.இந்திய-சீன தொழிலதிபா்களுக்கு விசா வழங்குவதற்கான பணிகளில், இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என்று தெரிவித்தாா்.