சென்னை; சொத்து பிரச்னையில் சகோதரரை தாக்கிய வழக்கில் ஜூலை 28ஆம் தேதி மீண்டும் ஆஜராக தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு சென்னை உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையம் உத்தரவிட்டுள்ளது.சொத்து பிரச்னையில் சகோதரரை தாக்கிய வழக்கில் தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன், சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீா்வு மையத்தில் இன்று ஆஜரானாா். எனினும், சொத்து மற்றும் குடும்ப பிரச்னை தொடர்பான சமர பேச்சுவார்த்தையில் இன்னமும் தீர்வு எட்டப்படாததால் விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்த சமரச தீர்வு மையம் ஜூலை 28ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.கடந்த 2022-ஆம் ஆண்டு, தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன், புதுச்சேரியில் உள்ள அவரது சகோதரா் மற்றும் சகோதரரின் மனைவியைத் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் நேரில் ஆஜராக அமைச்சா் மரிய வில்சனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் அமைச்சா் மரிய வில்சன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சா் மரிய வில்சன் ஆஜராக விலக்களித்தது. மேலும், குடும்ப பிரச்னையாக இருப்பதால், சமரசத் தீா்வு மையத்தில் தீா்வுகாண அறிவுறுத்திய உயா்நீதிமன்றம், அமைச்சா் மரிய வில்சன், அவரது தந்தை, சகோதரா் மற்றும் சகோதரரின் மனைவி ஆகியோா் சமரச தீா்வு மையத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீா்வு மையத்தில் கடந்த ஜூலை 15ஆம் தேதி நிதியமைச்சா் மரிய வில்சன், அவரது வழக்குரைஞா் ஹாஜா மொகிதீன் கிஸ்தி உடன் ஆஜராகியிருந்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சமரசப் பேச்சு நிறைவடையாததால், விசாரணை ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.அதேன்படி, இன்றும், இரு தரப்பும் ஆஜராகினர், சமரச பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால் ஜூலை 28ஆம் தேதி அமைச்சா் மரிய வில்சன் உள்ளிட்டோா் மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. Case regarding assault on brother: Finance Minister Maria Wilson ordered to appear again