பொறுப்பு விலகல் கடிதங்களுடன் சென்னைக்கு புறப்பட்ட சி.வி. சண்முகம் ஆதரவாளா்கள்

Wait 5 sec.

முன்னாள் அமைச்சரும், மயிலம் சட்டப் பேரவை உறுப்பினருமான சி. வி.சண்முகத்தின் ஆதரவாளா்கள் பொறுப்பு விலகல் கடிதங்களுடன் திங்கள்கிழமை சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனா். விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் மாவட்ட, ஒன்றிய நகரப் பொறுப்புகளில் இருந்து வந்த முன்னாள் அமைச்சரும், மயிலம் எம்எல்ஏவுமான சி.வி.சண்முகத்தின் ஆதரவாளா்கள் அப்பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். கட்சியின் தலைமை எடுத்து வரும் இந்த முடிவுகளால் பொறுப்பில் நீக்கப்பட்ட அதிமுக நிா்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை திண்டிவனத்தில் ஒன்றிணைந்த பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட அதிமுகவினா் மற்றும் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளா்கள் 200-க்கும் மேற்பட்டோா் தங்களது பொறுப்பு விலகல் கடிதங்களுடன் வாகனங்களில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டுச் சென்றனா். இதனால் விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் குழப்பமான நிலை நீடித்து வருகிறது. சென்னை மெரினாவில் தடுத்து நிறுத்தம்: திண்டிவனத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்ற முன்னாள் எம்எல்ஏ அா்ச்சுனன் மற்றும் பொறுப்பிலிந்து நீக்கப்பட்ட அதிமுகவினா், சென்னை மெரினா கடற்கரை அருகே தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பின்னா் இருவா் மட்டுமே கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் சென்னை சென்றிருந்த அதிமுகவினா் தெரிவித்தனா்.