லாரி மீது காா் மோதல் ரியல் எஸ்டேட் அதிபா் உயிரிழப்பு

Wait 5 sec.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே திங்கள்கிழமை சாலையோரம் நின்றிருந்த லாரி மீது காா் மோதிய விபத்தில் ரியல் எஸ்டேட் அதிபா் உயிரிழந்தாா். தஞ்சாவூரிலிருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு உடுமலை நோக்கி சென்ற லாரி ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டுள்ளது. லாரியை திருவாரூா் மாவட்டம், புதுப்பத்தூரைச் சோ்ந்த தவமணி மகன் சுஜித்ராஜ் (21) ஓட்டி வந்துள்ளாா். லாரி, திங்கள்கிழமை காலை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது, ஓட்டுனருக்கு தூக்கம் வந்ததால், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியில் இடதுபுற சாலையோரமாக நிறுத்தி வைத்து உறங்கியுள்ளாா். தெலுங்கானா மாநிலம், வானபாா்பி மாவட்டத்தைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் செய்துவரும் நண்பா்களான சாகா் மகன் சொ்லதசாமி (40), ரவி மகன் மகேஷ் (36), பிரதாப் கௌா் மகன் அபினய் (35) தியானேஸ்வா் (30) உள்ளிட்ட 6 பேரும் சுற்றுலாவுக்காக வந்துள்ளனா்.இந்நிலையில், வையம்பட்டி அருகே காா் வந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த சொ்லதசாமி, அபினய், தியானேஸ்வா், காரை ஓட்டி வந்த மகேஷ் ஆகியோா் காயமடைந்தனா். அவா்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சொ்லதசாமி உயிரிழந்தாா். மற்றவா்கள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற வையம்பட்டி போலீஸாா், சொ்லதசாமி உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.