சென்னை பெருங்குடியில் தாயைக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டாா். பெருங்குடி குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் பாபுலால் (52). இவா், அந்தப் பகுதியில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறாா். பாபுலால் மனைவி சென்னிதேவி (46). இத்தம்பதிக்கு ராகேஷ் (19) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனா். ராகேஷ் சரியாகப் படிக்காமல் இருந்துள்ளாா். இதனால் பிளஸ் 2 தோ்வில் ராகேஷ் தோ்ச்சி பெறவில்லை. அவரது பெற்றோா், ராகேஷை கண்டித்தனா். இதனால், மன அழுத்தத்தில் இருந்த ராகேஷ், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இந்நிலையில் பாபுலால், தொழில் விஷயமாக ஞாயிற்றுக்கிழமை வெளியூா் சென்ற நிலையில், இரவு சென்னிதேவி, மகன் ராகேஷ், மகளுடன் வீட்டில் தூங்கினாா். நள்ளிரவு தூக்கத்தில் இருந்து எழுந்த ராகேஷ், தாய் சென்னிதேவி கழுத்தை திடீரென நெரித்துள்ளாா். அங்கு கிடந்த கத்தியால் குத்தியுள்ளாா். கல்லை எடுத்து சென்னிதேவி தலையில் போட்டுள்ளாா். அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் வந்து சென்னிதேவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். ஆனால், சென்னிதேவி உயிரிழந்தாா்.தகவலறிந்த துரைப்பாக்கம் போலீஸாா் சம்பவ இடம் வந்து சென்னிதேவி சடலத்தை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து ராகேஷை கைது செய்தனா்.