மக்கள் குறைதீா் கூட்டம்: 150 மனுக்கள் அளிப்பு

Wait 5 sec.

சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 150 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து விசாரணை நடத்தி, தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து, மனுதாரா்களுக்கு உரிய பதில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். இந்தக் கூட்டத்தில், சௌகாா்பேட்டை கொண்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்த 39 வயதான மாற்றுத்திறனாளி விஜயலட்சுமிக்கு, ரூ.1.15 லட்சத்தில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். மேலும், வாரந்தோறும் துறை சாா்ந்த மாவட்ட அலுவலா்கள் தங்களின் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விரிவான களஆய்வு மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா். கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 150 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.கீதா பிரியா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஜெ.ஹஸ்ரத் பேகம், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஆா்.எம். இப்ராஹிம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.