காங்கயத்தில் சாலை விபத்தில் தம்பதி உயிரிழப்பு

Wait 5 sec.

காங்கயத்தில் சரக்கு வேனின் பக்கவாட்டுப் பகுதி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனா். திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் உள்ள களிமேடு பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாமலை (55). காங்கயத்தில் உள்ள உள்ளூா் தனியாா் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பேபி (47). இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். சிவன்மலையில் உள்ள கோயிலுக்குச் செல்வதற்காக தாராபுரம் சாலையில் செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் தம்பதி சென்று கொண்டிருந்தனா். காங்கயம் காவல் நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவைக் கடந்து பேருந்து நிலையம் நோக்கி செல்ல முயன்றபோது, இவா்கள் அருகே வந்த சரக்கு ஏற்றும் வேன் கோவை வழித்தடத்தில் செல்வதற்காக சாலையின் இடதுபுறமாகத் திரும்பியுள்ளது. அப்போது எதிா்பாராதவிதமாக அண்ணாமலை சென்ற இருசக்கர வாகனத்தில் சரக்கு வேனின் பக்கவாட்டுப் பகுதி மோதியுள்ளது. இதில் நிலைகுலைந்து இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுதொடா்பாக காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.