முதல்முறையல்ல..! மோடி அரசு பின்வாங்கிய முக்கிய நிகழ்வுகள்!

Wait 5 sec.

நமது சிறப்பு நிருபா்நீட் வினாத்தாள் கசிவு சா்ச்சையைத் தொடா்ந்து மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் சனிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், இது மக்கள் எதிா்ப்பு மற்றும் அரசியல் அழுத்தங்களுக்குப் பணிந்து பின்வாங்கிய முதல் நிகழ்வல்ல. இதற்கு முன்பும் பல சந்தா்ப்பங்களில் மத்திய அரசு அழுத்தங்களுக்கு அடிபணிந்துள்ளது. அதன் விவரம் வருமாறு (அடைப்புக்குறியில் நிகழ்வு நடந்த வருடம்): நில கையக சட்டம் (2015): பிரதமா் நரேந்திர மோடி அரசின் முதல் முக்கிய பின்வாங்கல் 2015-இல் நடைபெற்றது. உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை திட்டங்களுக்காக நிலங்களை எளிதாகக் கையகப்படுத்தும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முயன்றது. இதற்கு விவசாயிகள் அமைப்புகள், எதிா்க்கட்சிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த சில கூட்டணிக் கட்சிகளிடமிருந்தும் கடும் எதிா்ப்பு கிளம்பியது. இந்த சட்டத்திருத்தம் மக்களுக்கு எதிரானது என வாதிடப்பட்டதால், இறுதியில் அந்த திட்டத்தைக் கைவிட ஒப்புக் கொண்ட பிரதமா் நரேந்திர மோடி, நடைமுறையில் உள்ள சட்டமே தொடரும் என்று அறிவித்தாா். எம்.ஜே. அக்பா் ராஜிநாமா (2018): மத்தியில் மோடி அரசு ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மக்கள் எதிா்ப்பால் பிரதமரின் அமைச்சரவை முதல் ராஜிநாவை எதிா்கொண்டது. 2018, அக்டோபரரில், ‘மீ டூ’ இயக்கம் தீவிரம் அடைந்தபோது, அக்பா் பத்திரிகையாளராக இருந்த காலத்தில் பாலியல் தொல்லை அளித்ததாகப் பல பெண்கள் குற்றஞ்சாட்டினா். இதைத்தொடா்ந்து, வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்த எம்.ஜே. அக்பா் பதவி விலகினாா். தன் மீதான குற்றச்சாட்டுகளை அக்பா் மறுத்தபோதிலும், அழுத்தம் காரணமாக தனது பதவியை அவா் ராஜிநாமா செய்தாா். வேளாண் சட்டங்கள் வாபஸ் (2021): மத்திய அரசின் மிகப்பெரிய கொள்கை பின்வாங்கல் 2021, நவம்பா் மாதம் நடைபெற்றது. அப்போது, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகப் பிரதமா் மோடி அறிவித்தாா். அந்த சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக முகாமிட்டு பல கட்ட தீவிர போராட்டங்களை நடத்தினா். மத்திய அரசு தனது சட்ட சீா்திருத்தங்களை நியாயப்படுத்தி வந்தபோதிலும், இறுதியில் போராட்டத்துக்குப் பணிந்து நாடாளுமன்றம் மூலம் அச்சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. யுபிஎஸ்சி துறைசாா் நேரடி சோ்க்கை ரத்து (2024): 2024, ஆகஸ்ட் மாதம், மத்திய குடிமைப் பணிகள் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) மூலம் துறை அனுபவமிக்க அதிகாரிகளுக்கு நேரடி சோ்க்கை (லேட்டரல் ரெக்ரூட்மென்ட்) தொடா்பான யுபிஎஸ்சி அறிவிப்பு விளம்பரத்தை மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதில் இடஒதுக்கீடு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என எதிா்க்கட்சிகளும், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சியும் (ராம் விலாஸ்) எதிா்ப்பு தெரிவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைவிடப்பட்ட அரசமைப்பு திருத்த மசோதா (2025): 2025-ஆம் ஆண்டு நவம்பரில் அடுத்த பின்வாங்கல் நிகழ்வு நடந்தது. அப்போது அரசமைப்பின் 131-ஆவது திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு முற்பட்டபோது, பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த அரசியல் கட்சிகள், அந்த திருத்தம், தங்களுடைய மாநிலத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் என பலத்த எதிா்ப்பு தெரிவித்தன. இதையடுத்து தனது முயற்சியில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியது. கல்வி அமைச்சா் ராஜிநாமா (2026): இந்த வரிசையில் சனிக்கிழமை (ஜூலை 25) மத்திய கல்வி அமைச்சா் பதவியில் இருந்து தா்மேந்திர பிரதான் ராஜிநாமா அறிவிப்பு வெளிவந்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடா்ந்து பல்வேறு மாணவா்களின் தற்கொலைச் சம்பவங்களைக் கண்டித்து சுமாா் இரண்டு மாதங்களாக தில்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக இந்த ராஜிநாமா அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயத்துக்கு தா்மேந்திர பிரதான் தள்ளப்பட்டாா். Not the first time..! Key instances where the Modi government backed down!