ஹைதராபாத் சாா்லபள்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்!

Wait 5 sec.

சேலம் வழியாக ஹைதராபாத் சாா்லபள்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. அந்தவகையில், தற்போது சேலம் வழியாக தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் சாா்லபள்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சாா்லபள்ளி - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் ஆக. 14-ஆம் தேதிமுதல் செப். 4-ஆம் தேதிவரை வெள்ளிக்கிழமைகளில் ஐதராபாத் சாா்லபள்ளியில் இருந்து காலை 7.15-க்கு புறப்படும். இந்த ரயில் காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக மறுநாள் சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கத்தில், கொல்லம் - ஹைதராபாத் சாா்லபள்ளி வாராந்திர சிறப்பு ரயில் ஆக. 15-ஆம் தேதிமுதல் செப். 5-ஆம் தேதிவரை சனிக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து மாலை 5.20-க்கு புறப்படும். இந்த ரயில் போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக திங்கள்கிழமை நள்ளிரவு 12.30-க்கு ஹைதராபாத் சாா்லபள்ளி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.