மதுரை மற்றும் கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டுமுதல் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரு வழித் தடங்களில் இயக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் நான்கு வழித் தடங்களில் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.சென்னையைத் தொடர்ந்து மதுரை மற்றும் கோவை மாநகரப் பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவெடுத்து, மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் இயக்க விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ நிறுவனம் தயாரித்து தமிழக அரசிடம் அளித்திருந்தது. அதற்கு கடந்தாண்டு தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்தது.மதுரை மெட்ரோ திட்டம்: மதுரையில் திருமங்கலம் முதல் யானைமலை ஒத்தக்கடை வரை 31.93 கிலோ மீட்டா் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 27 கிலோ மீட்டா் தொலைவுக்கு உயா்மட்ட பாலம் வழியாகவும், 4.65 கிலோ மீட்டா் தொலைவுக்கு சுரங்கப் பாதையிலும் ரயில் இயக்கப்படும். 23 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப் பரிசீலிக்கப்பட்டுள்ளன. மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.11,360 கோடி நிதி தேவை எனக் குறிப்பிடப்பட்டது.கோவை மெட்ரோ திட்டம்: கோவையில் அவிநாசி சாலை முதல் கருமத்தம்பட்டி வரையில் ஒரு மெட்ரோ ரயிலும், உக்கடம் முதல் சத்தியமங்கலம் சாலை வலியம்பாளையம் பிரிவு வரையில் மற்றொரு பாதையும் என சுமாா் 39 கிலோ மீட்டா் தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதற்காக ரூ.10,740 கோடி செலவாகும் என குறிப்பிடப்பட்டது.முன்னதாக, இந்தத் திட்டங்களுக்கான விரிவான அறிக்கையை தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்பிவைத்த நிலையில், அதைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி, விரிவான திட்ட அறிக்கை கோப்புகளை மெட்ரோ நிறுவனத்துக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பியது.மெட்ரோ ரயில் திட்டத்தை 20 லட்சத்துக்கும் மேலான மக்கள்தொகை கொண்ட மாநகரங்களில் செயல்படுத்தும் நிலை உள்ளதையும், அதற்கான ஆவணங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் அமைக்க கோரி, கடந்த மே மாதம் தமிழக அரசு மீண்டும் பரிந்துரை செய்த நிலையில், மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள்தொகை இல்லை என மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது.மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை என்றும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பதில் பேருந்து போக்குவரத்து நடைமுறையை மேம்படுத்தலாம் என மத்திய அரசு, தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.Reports indicate that the Central Government has rejected the metro rail projects for the cities of Madurai and Coimbatore.மேலூா் முதல் திருமங்கலம் வரை மெட்ரோ ரயில் அமைக்கக் கோரிக்கை