பாரதியின் சக்தி வழிபாட்டுச் சிந்தனை

Wait 5 sec.

மகாகவி சுப்பிரமணிய பாரதி எட்டயபுரத்தில் பிறந்து, காசியில் வளர்ந்தார். இடைப்பட்ட காலத்தில் திருநெல்வேலி இந்துக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். பின்னர், மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியதும், தொடர்ந்து சென்னை வந்து சுதேசமித்திரன் நாளிதழிலும், பின்னர் இந்தியா உள்ளிட்ட இதழ்களிலும் பணியாற்றி, விடுதலை வேட்கை பொங்கும் தலையங்கங்களையும் கட்டுரைகளையும் எழுதியதும் நன்கறியப்பட்ட வரலாறு.சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த காலமும், பின்னர் புதுச்சேரியில் கழித்த புரட்சிகரமான ஆண்டுகளும் அவரது படைப்பாற்றலின் உச்சகட்டமாக அமைந்தன. இடையில் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் கடையத்திலும் சில காலம் தங்கியிருந்தார்.மகாகவி பாரதியார் அன்னை பராசக்தியின் மீது அளவற்ற பக்தி கொண்டவர். தேசமுத்துமாரி, ஆதிபராசக்தி, காளி, சக்தி ஆகிய பல்வேறு திருவுருக்களில் அன்னையைப் போற்றி ஏராளமான பாடல்களை இயற்றியுள்ளார். ஆனால் நெல்லை காந்திமதியம்மன், மதுரை மீனாட்சி அம்மன், சென்னை மயிலை கற்பகாம்பாள் அல்லது பிற தலத் தெய்வங்களை மட்டும் மையமாகக் கொண்டு தனித்துப் பாடல்கள் இயற்றியதாகச் செய்திகள் அதிகம் இல்லை. காரணம், எல்லா அன்னையரையும் ஒரே பராசக்தியின் திருவுருவமாகவே அவர் உணர்ந்திருந்தார் என்பதே பொருத்தமான விளக்கமாகும்.சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயிலின் கோமதி அம்மனைப் போற்றிப் பாரதி இயற்றிய 'கோமதி மகிமை' என்ற பாடல்கள் தனிச்சிறப்புடையவை. சிவனும் திருமாலும் ஒன்றே என்ற உயரிய சமரசத் தத்துவத்தை எடுத்துரைக்கும் சங்கரநாராயணர் திருக்கோயிலின் ஆன்மிகப் பெருமையை இந்தப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.பாரதி பாடியது...தேவர்க் கெலாந்தேவன்;- உயர்சிவபெரு மான்பண்டொர் காலத்திலேகாவலி னுலகளிக்கும் - அந்தக்கண்ணனுந் தானுமிங் கோருருவாய்ஆவலொ டருந்தவங்கள் - பலஆற்றிய நாகர்க ளிருவர்முன்னேமேவிநின் றருள்புரிந்தான், -அந்தவியப்புறு சரிதையை விளம்புகின்றேன்.இந்தப் பாடல் இன்றும் சங்கரன்கோவில் கோமதி அம்மன் சந்நிதியில் பக்தர்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை கல்வெட்டு வடிவில் இடம் பெறச்செய்வதும் காலத்தின் கட்டயாமாகும்.மேலும் அவர்,'வாழிய முனிவர்களே! புகழ்வளர்ந்திடுஞ் சங்கரன் கோயிலிலேஊழியைச் சமைத்தபிரான்;- இந்தஉலக மெலாமுருக் கொண்டபிரான் ...'எனத் தொடங்கி, பரம்பொருள் எல்லா உயிர்களுக்கும் உயிராய் விளங்கும் உண்மையை விளக்குகிறார். பரசிவத்தின் பேரொளி, அறிவுக்கு அப்பாற்பட்ட மெய்ப்பொருள் என்பதை எளிய தமிழில் தத்துவ ஆழத்துடன் எடுத்துரைக்கின்றார்.இந்தக் கீர்த்தனையைப் படிப்பதன் பெருமையையும் பாரதி சிறப்பாகப் பதிவு செய்கிறார்.'கேளீர் முனிவர்களே! இந்தக்கீர்த்தியின் சரிதையைக் கேட்டவர்க்கேவேள்விகள் கோடி செய்தால்- சதுர்வேதங்கள் ஆயிரம் முறை ஓதிய பலனை அடைவர்.'இது வெறும் பக்திப் பாடல் மட்டுமல்ல; வேதாந்தச் சிந்தனையையும், சமய சமரசக் கருத்தையும் இணைக்கும் அரிய இலக்கியமாகும்.பாடலின் இறுதிப் பகுதியில், உலகின் நிலையாமையையும் பரம்பொருளின் எல்லையற்ற தன்மையையும் வியந்து பாரதி பாடுகிறார்.கடலிடையே தோன்றும் புன்குமிழிகள் போல் உலகங்கள் தோன்றி மறைகின்றன; ஆனால், இதன் மெய்ப்பொருள் பரசிவன் சக்தியே என்று உறுதி சொல்கின்றார்.'இக்கட லதனகத்தே அங்கங்கிடையிடை தோன்றும்புன் குமிழிகள்போல்தொக்கன உலகங்கள் -திசைத்தூவெளி யதனிடை விரைந்தோடும்மிக்கதோர் வியப்புடைத்தாம் -இந்தவியன்பெரு வையத்தின் காட்சி கண்டீர்;மெய்க்கலை முனிவர்களே! இதன்மெய்ப்பொருள் பரசிவன் சக்தி கண்டீர்.'இதன் பின்னர்,'எல்லையுண்டோ இலையோ?- இங்குயாவர்கண்டார்?'என்று தொடங்கி, பாடலை முழுமையாக நிறைவு செய்யாமல் விட்டுவிடுகிறார்.பாரதி ஏன் இந்தப் பாடலை முடிக்கவில்லை? எல்லையற்ற பராசக்தியின் மகிமையை வார்த்தைகளால் முழுமையாக வர்ணிக்க இயலாது என்ற உணர்வோ? அல்லது இன்னும் தொடர வேண்டிய காவியமாக அதை எண்ணினாரோ? உறுதியாகச் சொல்ல இயலாது. ஆனால், அந்த நிறைவின்மை கூட இந்தப் பாடலுக்கு ஒரு தனித்துவமான இலக்கிய அழகை அளிக்கிறது.அதனால்தான், 'இந்தப் பாடலை நிறைவு செய்யவே பாரதி மீண்டும் பிறக்க வேண்டும்' என்று பக்தர்களும் தமிழ் ஆர்வலர்களும் உருக்கமாகக் கூறுவது வியப்பல்ல.சங்கரன்கோவில் ஆடித் தவசுத் திருவிழாவை முன்னிட்டு, பாரதியின் 'கோமதி மகிமை' பாடல்களை விளக்கவுரையுடன் தொகுத்து, சிறப்பான நூலாகவோ அல்லது நினைவுமலராகவோ வெளியிட்டால், அது தமிழ் இலக்கியத்துக்கும் பக்தி மரபுக்கும் சிறந்த பணியாக அமையும்.