இந்த வாரம் கலாரசிகன் - 26-07-2026

Wait 5 sec.

பாபநாசம் சிவனை அகற்றி நிறுத்தி விட்டு தமிழ் சினிமா குறித்தும் எழுத முடியாது; கர்நாடக சங்கீதம் குறித்தும் எழுதிவிட முடியாது. இன்றைய தலைமுறையினரால் அவர் அதிகம் பேசப்படாமல் இருந்தாலும், எந்தவொரு சங்கீதக் கச்சேரி நடந்தாலும் அதில் அநேகமாக அவரது சாகித்தியம் ஏதாவது இடம் பெறாமல் இருக்காது என்கிற அளவுக்கு வியாபித்திருக்கிறது அவரது பங்களிப்பு.1934-இல் பாபநாசம் சிவன் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் அறிமுகமான 'பவளக் கொடி' திரைப்படத்தில் மொத்தப் பாடல்கள் 50. அதில் கதாநாயகன் 'ஏழிசை மன்னர்' எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்கள் மட்டும் 22. அத்தனை பாடல்களும் பட்டிதொட்டியெல்லாம் முழங்கும் பாடல்களாகப் பிரபலமானதைத் தொடர்ந்துதான், எம்.கே.டி. பாகவதர் தமிழ் சினிமாவில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத முதல் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தார்.பவளக் கொடியில் தொடங்கி அவர் கடைசியாக இசையமைத்த 'நாட்டிய ராணி' (1949) வரையில் பாபநாசம் சிவன் பாட்டெழுதிய, இசையமைத்த திரைப்படங்கள் இருபதுக்கும் குறைவு. ஆனால், எழுதியிருக்கும் திரைப்படப் பாடல்கள் ஏறக்குறைய ஆயிரம்.தன்னை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் பாபநாசம் சிவனை ஒப்பந்தம் செய்துவிட்டீர்களா என்று கேட்ட பிறகுதான் எம்.கே.டி. பாகவதர் நடிக்க ஒப்புக் கொள்வார் என்றால், அவரது பாடல்களுக்கு இருந்த வரவேற்பைப் புரிந்து கொள்ளலாம்.பாபநாசம் சிவனின் சொந்த ஊர் பாபநாசம் அல்ல; அவரது இயற்பெயர் சிவனும் அல்ல. அவர் பிறந்த ஊர் தஞ்சை மாவட்டம் போலகம். அவரது இயற்பெயர் ராமையா. ஏழு வயதிலேயே தந்தையை இழந்ததைத் தொடர்ந்து, அவரது தாயார் அந்தச் சிறுவனையும் அழைத்துக் கொண்டு, திருவனந்தபுரத்தில் இருந்த தனது சகோதரரைத் தஞ்சம் அடைந்தார்.அங்கே மலையாளம், சம்ஸ்கிருதம் ஆகியவற்றுடன் மகாராஜா கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார் ராமையா. தனது தாயாரின் மறைவுக்குப் பிறகு இளைஞரான ராமையா ஊர் ஊராகக் கோயில்களில் பக்திப் பாடல்களைப் பாடியபடி தமிழகமெங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தார். திருவனந்தபுரத்தில் நீலகண்ட சிவனிடம் அவர் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டிருந்தது, பக்திப் பாடல்கள் புனையக் கைகொடுத்தது. சிறிது காலம் கோனேரி ராஜபுரம் வைத்தியநாத பாகவதரிடமும் சங்கீதம் கற்றுக் கொண்டார் அவர்.அந்தக் காலகட்டத்தில் பட்டை பட்டையாக விபூதியுடன் பாபநாசம் கோயிலின் சந்நிதி முன்பாக அமர்ந்தபடி மெய்மறந்து பக்திப் பாடல்கள் புனைந்து பாடுவார் ராமையா. சிவப்பழமாக இருக்கும் அவரை மக்கள் சிவம், சிவம் என்று அழைக்கத் தொடங்கினார்கள். அதுதான் பாபநாசம் சிவன் என்கிற பெயருடன் அவர் புதுப்பிறவி எடுத்த பின்னணி.அந்தக் காலத்திலேயே பாபநாசம் சிவனின் பஜனைகள் மிகவும் பிரபலம். அவரது பஜனையில்லாமல் கும்பகோணம் மகாமகம், நாகை ஆடிப்பூரம், திருவையாறு சப்தஸ்தானம், திருவாரூர் விருஷப வாகன சேவை, மயிலாப்பூர் மார்கழி பஜனை கிடையாது. மார்கழி மாதம் சென்னை கபாலீஸ்வரர் கோயிலின் மாடவீதிகள் வழியாக அவரும் குழுவினரும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் பஜனை பாடியபடி நடந்து வருவதைப் பார்க்க நூற்றுக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள். அவர்களில் ஒருவராக நானும் ஓரிருமுறை இருந்திருக்கிறேன்.சங்கீத நாடக அகாதெமி விருது, சென்னை மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி விருது உள்ளிட்ட பல விருதுகளால் அவர் கெளரவிக்கப்பட்டாலும், கடைசிவரை தன்னை இறை இசைக்கு அர்ப்பணிக்க வந்ததாகவே கருதி வாழ்ந்தார் என்பதுதான் தனிச் சிறப்பு. 1973-இல் தனது 83-ஆவது வயதில் அவர் மறைந்தபோது, எம்.ஜி.ஆர். நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். பாபநாசம் சிவனின் சகோதரர் ராஜகோபால ஐயரின் மகள்தான் எம்.ஜி.ஆரை தொடர்ந்து தமிழக முதல்வரான அவரது மனைவி வி.என். ஜானகி. இப்போது எதற்காக திடுதிப்பென்று பாபநாசம் சிவன் குறித்த இந்த விரிவான பதிவு என்று சிலர் கேட்கக்கூடும். முன்பொருமுறை நான் ஹைதராபாத் சென்றிருந்தபோது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் தினமணியில் இணைந்திருக்கும் செய்தி ஆசிரியர் இரா. சோமசுந்தரம் எனக்கொரு சிறு புத்தகத்தை அன்பளிப்பாகத் தந்தார். 1996-இல், பாபநாசம் சிவனின் புதல்வியார் ருக்மிணி ரமணியால் வெளியிடப்பட்டிருக்கும் 'எனது நினைவுக் கடல்' என்கிற ஸ்ரீபாபநாசம் சிவன் எழுதிய புத்தகம் அது. அதைப் படித்தபோது, கர்நாடக சங்கீதத்துக்கு பல சாகித்தியங்களைத் தந்த தமிழ்த் திரையுலகின் முன்னத்தி பாடலாசிரியர்களில் ஒருவரான பாபநாசம் சிவனை நினைவுபடுத்தத் தோன்றியது.07.01.1968 முதல் 21.04.1968 வரை தொடர்ந்து மூன்று மாதங்கள் 'எனது நினைவுக் கடல்' என்ற தலைப்பில் பாபநாசம் சிவன் 'தினமணி' ஞாயிறு சுடரில் ஒரு தொடர் எழுதி வந்தார். அதை அவரது நினைவுக் குறிப்புகள் என்றும் குறிப்பிடலாம். தனது இளமைக் காலத்து இசையுலக நினைவுகள், அன்றைய இசை விற்பன்னர்கள் குறித்த தகவல்கள், தனது சொந்த அனுபவங்கள் உள்ளிட்டவை அதில் இடம் பெறுகின்றன.ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், மருதாநல்லூர் பெரிய குழந்தை ஸ்வாமிகள், பட்டீசுவரம் முத்துப்பந்தல், திருவாரூர் தேர்த் திருவிழா என்று அவரது நினைவின் இடுக்குகளில் கசிந்து கொண்டிருந்த பல நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார் பாபநாசம் சிவன். அதன் மூலம், இன்று மறைந்துவிட்ட பலர் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தப் பதிவு இல்லாமல் போனால், நமக்கு அந்த நாள் நிகழ்வுகளை யார் சொல்லியிருப்பார்கள்?பாபநாசம் சிவனின் திடீர் கல்யாணம் குறித்த பதிவு ஆச்சரியப்படுத்துகிறது. நண்பர் ஒருவர், ஊர் ஊராக பஜனை பாடித் திரிந்து கொண்டிருக்கும் சிவனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முன்மொழிகிறார்.'என்னை அழைத்துக் கொண்டு போனார்கள், தஞ்சையில் அம்மணி என்றழைக்கப்பட்ட லட்சுமி என்கிற பெண்ணைப் பார்த்தேன். என்னையும் அவர்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தது. இருவருக்குமே ஜாதகம் இல்லை. நற்சகுனங்கள் நிகழ்ந்தன'' என்று அதைப் பதிவு செய்கிறார் அவர். இதுபோல் பல சுவாரஸ்யமான சம்பவங்கள்.அந்த 27 தினமணி சுடர் கட்டுரைகளையும் பாதுகாத்துப் புத்தகம் வெளிவரக் காரணமாக இருந்தவர் எச். வைத்தியநாதன் என்கிற அன்றைய நாள் 'தினமணி' வாசகர். அதை மீண்டும் நினைவுபடுத்துவது இன்றைய நாள் 'தினமணி' ஆசிரியர்.மகாகவி காலாண்டிதழின் ஏப்ரல்-ஜூன் இதழில் வெளிவந்திருக்கிறது கவிஞர் மு.முபாரக்கின் இந்தக் கவிதை. 'அர்த்த புஷ்டியான' கவிதை என்பார்களே அது இதுதான்.மழையைப் போல்நேசிக்கப்படுபவனும்,மழையைப் போல்சபிக்கப்படுபவனும்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...மழையாய்!