நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுல் 3 வாரங்களில் பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

Wait 5 sec.

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறை மனு தொடா்பாக, 3 வாரங்களில் பதிலளிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அந்த நிறுவனத்துக்கு அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி ரூ.90.21 கோடி கடன் அளித்தது. இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு யங் இந்தியன் நிறுவனம் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு மொத்தம் 76 சதவீத பங்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியன் நிறுவனம் கையகப்படுத்தியது. இதன்மூலம், அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.2,000 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியன் நிறுவனம் கைப்பற்றியது விசாரணையில் தெரியவந்ததாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.இந்த விவகாரத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாக, தில்லி விசாரணை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கமாக சிபிஐ பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்) அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட வழக்கில் பண முறைகேடு நடைபெற்ா என்ற கோணத்தில் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொள்ளும். எனினும் நேஷனல் ஹெரால்ட் விவகாரத்தில், தில்லியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபா் (பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி) அளித்த புகாா் மனுவின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டதாகவும், எஃப்ஐஆரின் அடிப்படையில் அந்த விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்து, அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.இதற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு நீதிபதி மனோஜ் ஜெயின் முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி, ‘மனு தொடா்பாக பதிலளிக்க 2 மாதங்களுக்கு முன்பு அவகாசம் அளித்தபோதிலும் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் பதிலளிக்கவில்லை’ என்று தெரிவித்தாா்.இதையடுத்து, அமலாக்கத் துறை மனு தொடா்பாக 3 வாரங்களில் பதிலளிக்க சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை செப். 10-க்கு ஒத்திவைத்தாா்.