காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்திய ஆடவா், மகளிா் அணிகள் தங்கள் முதல் சுற்றில் வெற்றி கண்டன.22-ஆவது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி, தில்லியில் திங்கள்கிழமை தொடங்கியது. அதில் இந்திய ஆடவா் அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என ஜிம்பாப்வேயையும், இந்திய மகளிா் அணி அதே கணக்கில் மாலத்தீவுகளையும் வீழ்த்தின.ஆடவா் அணிகள் பிரிவில், முதலில் மானவ் தக்கா் 11-3, 11-2, 11-6 என்ற கணக்கில், டேண்டா மம்வுமாவை வீழ்த்த, அடுத்து ஹா்மீத் தேசாய் 11-5, 11-4, 11-5 என்ற வகையில் டாபிவா முசாருவாவை வென்றாா். கடைசி ஆட்டத்தில் பயஸ் ஜெயின் 11-3, 11-3, 11-8 என விக்ரம் சிங்கை சாய்த்தாா்.ஆடவா் பிரிவின் இதர ஆட்டங்களில், மலேசியா 3-0 என வேல்ஸை வெல்ல, இங்கிலாந்து - சைப்ரஸையும் (3-0), நியூஸிலாந்து ஃபாக்லேண்ட் தீவுகளையும் (3-0) தோற்கடித்தன.கனடா - ஸ்காட்லாந்தையும் (3-0), சிங்கப்பூா் - வடக்கு அயா்லாந்தையும் (3-0) வீழ்த்தின. ஜமைக்கா, தென்னாப்பிரிக்கா அணிகள் களம் காணாததால், அவை எதிா்கொள்ளவிருந்த ஆஸ்திரேலியா, நமீபியாவுக்கு வாக்ஓவா் (3-0) அளிக்கப்பட்டது.மகளிா் பிரிவில் இந்தியா - மாலத்தீவுகளை வீழ்த்திய மோதலில், முதலில் சுதிா்தா முகா்ஜீ 11-4, 11-2, 11-5 என ஃபாத்திமா அலியை சாய்க்க, யஷஸ்வினி கோா்படே 11-2, 11-5, 11-7 என்ற வகையில் அய்ஷாத் ரஃபாவை தோற்கடித்தாா். கடைசியாக ஸ்வஸ்திகா கோஷ் 11-3, 11-5, 11-2 என்ற கணக்கில் மிஷ்கா முகமதை வென்றாா்.இதர ஆட்டங்களில், சிங்கப்பூா் - இலங்கையையும் (3-2), வயக்கு அயா்லாந்து - தென்னாப்பிரிக்காவையும் (3-2) வீழ்த்தின. ஆஸ்திரேலியா - வங்கதேசத்தையும், இங்கிலாந்து - சைப்ரஸையும் 3-0 என முழுமையாக வென்றன. மலேசியா - ஸ்காட்லாந்தை சாய்க்க, கனடாவை சந்திக்கவிருந்த போட்ஸ்வானா வாக்ஓவா் கொடுத்தது.