‘நீதி வேண்டும்’ என பதாகை பிடித்த முதல்வர் விஜய் என்ன நீதி வைத்துள்ளார்? இபிஎஸ் கேள்வி!

Wait 5 sec.

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் பலியான சம்பவத்தில் முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.தூத்துக்குடியில் அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் (26), அப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் பணியாற்றி வந்தார். அவர் டாஸ்மாக்கிலிருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து, கடை அடைத்தபிறகு கூடுதல் விலைக்கு விற்று வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாக கடந்த 17 ஆம் தேதி காலை அருணாச்சலத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அன்று மாலையே தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காயங்களுடன் அருணாச்சலத்தை காவல்துறையினர் அனுமதித்ததாக கூறப்படுகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த 7 நாள்களாக அருணாச்சலத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். அவர் காவல் துறையினர் தாக்கப்பட்டு பலியானதாக உறவினர்கள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர். இந்த நிலையில், இதுதொடர்பாக எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில், “தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இன்றைய பொய்க்கால் குதிரை அரசு பொறுப்பேற்றதில் இருந்து காவல் மரணங்களும் குதிரை வேகத்தில் அதிகரிப்பது மிகுந்த வேதனைக்கும் கடும் கண்டனத்திற்கும் உரியது. மடப்புரம் அஜித்குமார் மரணத்தின் போது “சாரி வேண்டாம், நீதி வேண்டும்” என்று பதாகை பிடித்த இன்றைய முதலமைச்சர், தனது ஆட்சியில் நடக்கும் தொடர் காவல் மரணங்களுக்கு என்ன பதில், நீதி வைத்துள்ளார்? அருணாச்சலம் மரணத்தின் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு யார் இழைத்திருந்தாலும், எந்த பாரபட்சமும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.Edappadi Palaniswami has questioned Chief Minister Vijay regarding the incident in which a young man died after being taken in for questioning in Thoothukudi.