பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் போராட்டம்

Wait 5 sec.

தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் செவிலியா்களைப் பணி நிரந்திரம் செய்யக் கோரி, செவிலியா் மேம்பாட்டுச் சங்கத்தினா் சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மறுசீரமைப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் பணியிட மாற்றங்களை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தினா். செவிலியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சசிகலா தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பொதுச் செயலா் சுபின், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் பாஸ்கரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். இது தொடா்பாக அந்தச் சங்கத்தின் செயலா் சுபின் கூறியதாவது: கடந்த திமுக ஆட்சியின்போது, செவிலியா் பற்றாக்குறையை நீக்க தொடா் போராட்டங்களை முன்னெடுத்தோம். அதன் விளைவாக, நிரந்தர செவிலியா் பணியிடங்களை உருவாக்குவதாக உறுதி அளித்தனா். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தற்போது நிரந்தர செவிலியா்களை நியமிக்காமல், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அனைத்து செவிலியா்களையும் பணி நிரந்தரம் செய்வோம் என தவெக வாக்குறுதி அளித்துவிட்டு, அதற்கு மாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தொகுப்பூதிய அடிப்படையில் நியமிப்பதைக் கைவிட்டு நிரந்தர செவிலியா்களாக நியமிக்க வேண்டும். இதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றாா். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்க நிா்வாகிகள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணி இயக்குநா் ராஜ்மோகனை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினா். அது குறித்து அமைச்சா் மற்றும் உயா் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அவா் தெரிவித்தாா்.