கட்சித் தாவலுக்கு தேவை கடிவாளம்!

Wait 5 sec.

மணீஷ் திவாரிஇந்தியாவில் 1967 மார்ச் முதல் 1968 பிப்ரவரி வரை, சுமார் 438 எம்.பி, எம்எல்ஏக்கள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறியுள்ளனர். இது, 1952 முதல் 1967 வரையிலான காலகட்டத்தில் பதிவான 542 கட்சித் தாவல் சம்பவங்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாகும்.எம்.பி., எம்எல்ஏக்களின் இந்த "விலைபேசும் அரசியல்' மூலம் அரசுகளும் அமைக்கப்பட்டன. இதனால், 1967 டிசம்பர் 8-இல், மக்களவையில் ஒருமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, கட்சி தாவும் பிரச்னையை அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.அந்தக் குழு, கட்சி மாறிய உறுப்பினர் ஓராண்டுகாலத்துக்கு அல்லது மீண்டும் தேர்தலில் வெற்றி பெறும் வரை, அமைச்சர் பதவி, மக்களவைத் தலைவர், பேரவைத் தலைவர் பதவி அல்லது ஊதியம் பெறும் எந்தவொரு பொதுப் பதவியையும் வகிக்கத் தகுதியற்றவராக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.இருப்பினும், 1985-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 52-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் மூலமாகத்தான், அரசமைப்பின் பத்தாவது அட்டவணையில் கட்சித் தாவல் தடைச் சட்டம் இணைக்கப்பட்டது.ஆனால் அதன் பின்னர், தனிப்பட்ட உறுப்பினர்கள் கட்சி மாறுவது குறைந்து, அதற்குப் பதிலாக மொத்தக் குழுக்களாக திட்டமிட்டு கட்சி தாவுவது அதிகரித்தன. பத்தாவது அட்டவணையின் பிரிவு 3-இல் இருந்த, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பிரிந்தால் அது செல்லுபடியாகும் என்ற விதி, மொத்தமாகக் கட்சி மாறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையாக மாறியது. இதன் மூலம், ஒரு கட்சியின் எம்எல்ஏக்கள் குழுவாகப் பிரிந்து, அரசைக் கவிழ்த்து, புதிய ஆட்சியை அமைத்தாலும் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, 2003-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 91-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம், பிரிவு 3-ஐ நீக்கியது. ஆனால், பிரிவு 4 அப்படியே தொடர்ந்தது. அதன் கீழ், ஓர் அரசியல் கட்சி மற்றொரு கட்சியுடன் இணைந்ததாகவும், அந்த இணைப்பை சட்டப்பேரவைக் கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் இருந்தால், உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள்.இதன் விளைவாக, முன்பு இருந்த மூன்றில் ஒரு பங்கு என்ற வரம்பு மூன்றில் இரண்டு பங்காக உயர்த்தப்பட்டது. இதனால், முன்பு "மொத்தமாக உறுப்பினர்களை வாங்குதல்" என்ற நிலை இருந்தது என்றால், தற்போது அது "பெரிய அளவிலான எம்எல்ஏக்கள் கொள்முதல்' என்ற நிலைக்கு மாறிவிட்டது.பத்தாவது அட்டவணையின் பிரிவு 2-இன்படி, ஓர் உறுப்பினர் தன்னிச்சையாக தன் அரசியல் கட்சியின் உறுப்பினர் பதவியை விட்டு விலகினாலோ, அல்லது கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்தாலோ அந்தக் கணமே தகுதி நீக்கத்துக்கு உள்ளாவார்.இருப்பினும், பத்தாவது அட்டவணை ஐந்து விதிவிலக்குகளை வழங்குகிறது. அவை: முன்கூட்டியே அனுமதி பெற்றிருப்பது; பின்னர் கட்சியால் மன்னிக்கப்பட்டிருப்பது; பிரிவு 4-இன்படி, அசல் அரசியல் கட்சி மற்றொரு கட்சியுடன் இணைக்கப்படும்போது; இணைப்பை ஏற்காமல் தனிக் குழுவாக செயல்படும் உரிமை; பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தொடர்பான பிரிவு 5 உள்ளிட்டவற்றால் சட்டத்தின் அடிப்படை நோக்கம் சிதைந்துவிட்டது.இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் தங்கள் தொகுதி மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் பேரவையில் பிரதிபலிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சட்டப்பேரவையை வடிவமைத்தனர். ஆனால், பத்தாவது அட்டவணை நடைமுறையில், மக்கள் பிரதிநிதிகள், கட்சியின் கொறடா உத்தரவுக்கு அடிமைகளாக மாறிவிட்டனர்.சட்டங்கள் உருவாக்கப்படுவது என்பது விவாதம், ஆலோசனை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறவில்லை. மாறாக, ஒவ்வொரு உறுப்பினரின் வாக்கும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒரு நிர்வாகச் செயலாகவே மாறியுள்ளது.இதனால், தொகுதி மக்களின் நலன், உறுப்பினரின் மனசாட்சி, பொதுச் சிந்தனை ஆகியவை அனைத்தும் கட்சிக் கட்டுப்பாட்டின் கீழ் ஒடுக்கப்பட்டுள்ளன. இன்று முழு குழுவாக எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதற்கு பிரிவு 4 ஒரு பாதுகாப்புக் கவசமாக பயன்படுத்தப்படுகிறது.பிரிவு 4-இன்படி, ஓர் உறுப்பினரின் அசல் அரசியல் கட்சி மற்றொரு கட்சியுடன் இணைந்தால், மேலும் அந்தக் கட்சியின் உறுப்பினர்களில் சிலர் புதிய கட்சியில் சேர்ந்திருந்தாலோ அல்லது இணைப்பை ஏற்காமல் தனிக் குழுவாக செயல்பட்டாலோ, அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள்.இதற்காக, சட்டப்பேரவையில் கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் இணைப்பை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, அந்த இணைப்பு நடைபெற்றதாகக் கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது.ஆனால், சட்ட ரீதியாக கவனிக்க வேண்டிய மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. முதலாவது, பத்தாவது பிரிவின்படி, இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. எந்த உறுப்பினருக்கும் எதிராக தகுதி நீக்க கோரிக்கை எழும்பாவிட்டால் அவர் நடவடிக்கை எடுக்க முடியாது. "இணைப்பு நடந்துவிட்டது' என்று அவர் அறிவிக்க முடியாது.இணைப்பு என்பது, தகுதி நீக்க வழக்கில் குற்றச்சாட்டுக்கு எதிராக முன்வைக்கப்படும் ஒரு பாதுகாப்பு வாதம் மட்டுமே. இரண்டாவது, சட்டப்பேரவை கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் முடிவெடுப்பது மட்டும் அரசியல் கட்சிகள் இணைந்துவிட்டன என்று அர்த்தமல்ல. பிரிவு 4(2)-இல் உள்ள "இணைப்பு நடந்ததாகக் கருதப்படும்' என்ற சட்டக் கட்டமைப்பு, தகுதி நீக்க வழக்கில் சான்றாகப் பயன்படுத்தப்படுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. அது அரசியல் கட்சிகளை இணைக்கும் அதிகாரத்தை சட்டப்பேரவைக் கட்சிக்கு வழங்கவில்லை.மூன்றாவது, 2023-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பில், அரசியல் கட்சி மற்றும் சட்டப்பேரவைக் கட்சி இரண்டும் வேறுபட்டவை என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இரண்டையும் ஒன்றாகக் கருதினால், பத்தாவது பிரிவு செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.எனவே, முதலில் அசல் அரசியல் கட்சிகள் உண்மையில் இணைந்திருக்க வேண்டும். அதன் பிறகே சட்டப்பேரவை கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அந்த இணைப்பை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளும் நிறைவடையாவிட்டால், கட்சி மாறிய எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திலிருந்து தப்ப முடியாது.2010, 2021 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில், மக்களவையில் நான் (மணீஷ் திவாரி) தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்தேன்.இதில், 2025-ஆம் ஆண்டு மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்னெவென்றால், கட்சித் தாவல் என்பது இரு செயல்களுக்கு மட்டுமே பொருந்த வேண்டும். முதலில் தன்னிச்சையாக கட்சியை விட்டு வெளியேறும் நாடாளுமன்ற, பேரவை உறுப்பினர்கள் உடனடியாகவும் தானாகவும் உறுப்பினர் பதவியை இழக்க வேண்டும். மற்றொன்று கொறடா உத்தரவை மீறுதல் ஆகும்.அதே நேரத்தில் கீழ்க்கண்ட நான்கு விஷயங்களில் மட்டுமே கொறடா உத்தரவு மீறுதல் என்ற வரம்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அவை, நம்பிக்கை/ நம்பிக்கையில்லா தீர்மானங்கள், ஒத்திவைப்பு தீர்மானங்கள், நிதி தொடர்பான மசோதாக்கள், பண மசோதாக்கள் ஆகியவை ஆகும்.தகுதி நீக்க நடவடிக்கைக்கு உள்ளாகும் உறுப்பினர், 15 நாள்களுக்குள் தன்னை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரி மனு தாக்கல் செய்யலாம். அந்த மனு 60 நாள்களுக்குள் கட்டாயமாக முடிவு செய்யப்பட வேண்டும். இவைதான் எனது தனிநபர் மசோதாவில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்.இன்று ஜனநாயகம் கடுமையாக சிதைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், மிக எளிமையான கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.அதன்படி, ஓர் உறுப்பினர் தன்னிச்சையாக தனது கட்சியை விட்டு விலகினாலோ அல்லது நம்பிக்கை தீர்மானம், நம்பிக்கையில்லா தீர்மானம், ஒத்திவைப்பு தீர்மானம், நிதி மசோதா மற்றும் பண மசோதா போன்ற விஷயங்களில் கட்சியின் கொறடா உத்தரவை மீறினாலோ, அவர் உடனடியாக பதவியை இழக்க வேண்டும்.அதன் பின்னர், அவர் தன்னுடைய செயலுக்கான நியாயத்தை விளக்கி ஒரு மீளாய்வு மனுவைத் தாக்கல் செய்யலாம்.அந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் பணியில் இருக்கும் நீதிபதி தலைமையிலான சுய அதிகாரமுள்ள தீர்ப்பாயம் விசாரிக்கலாம். எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில், அந்த மாநில உயர்நீதிமன்றத்தின் பணியில் இருக்கும் நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் 90 நாள்களுக்குள் கட்டாயமாகத் தீர்மானிக்க வேண்டும்.இத்தகைய நடைமுறை, மக்கள் பிரதிநிதிக்கும் வாக்காளருக்கும் இடையிலான அடிப்படை உறவை மீண்டும் வலுப்படுத்துவதுடன், தேவையான அளவு கட்சிக் கட்டுப்பாட்டையும் பாதுகாக்கும். அதே நேரத்தில், நேர்மையான கருத்து வேறுபாடுகளுக்கும் போதுமான ஜனநாயக இடத்தை வழங்கும்.கட்டுரையாளர்:முன்னாள் மத்திய அமைச்சர்.