நமது சிறப்பு நிருபர்சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக அமைய உத்தேசிக்கப்பட்டுள்ள பரந்தூர் பசுமை வழி விமான நிலைய திட்டத்துக்கு மாற்று இடத்தை வழங்கும் முன்மொழிவு எதுவும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விகளுக்கு, விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூர்வ பதில் வருமாறு:பரந்தூரில் சர்வதேச பசுமைவழி விமான நிலையம் அமைப்பதற்காக, தமிழக அரசு நிறுவனமான "டிட்கோ'வுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2025-ஆம் ஆண்டு ஏப். 7-ஆம் தேதி கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது. டிட்கோ சமர்ப்பித்த திட்டத்தின்படி, முதல் கட்ட திட்ட தயாரிப்புக்கான உத்தேச திட்ட மதிப்பு ரூ. 10,500 கோடியாகும். 2008-ஆம் ஆண்டின் பசுமைவழி விமான நிலைய கொள்கையின்படி, நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு, நிதி திரட்டுதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுதல் உள்ளிட்ட செயல்பாட்டுப் பொறுப்புகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனத்தையே சாரும். அத்திட்டத்தை நிறைவு செய்வதற்கான காலக்கெடு என்பது நிலம் கையகப்படுத்துதல், கட்டாய அனுமதி பெறுதல் மற்றும் நிதி ஆதாரங்களை உறுதி செய்தல் போன்ற பல காரணிகளைப் பொருத்தே அமையும் என்று அமைச்சர் முரளிதர் மோஹோல் கூறியுள்ளார்.பரந்தூர் விமான நிலையத்துக்கான இடத்தை மாற்றக் கோரி தமிழக அரசு ஏதேனும் புதிதாக முன்மொழிவு அல்லது கோரிக்கை விடுத்துள்ளதா என்ற கேள்விக்கு "இல்லை' என ஒற்றை வார்த்தையில் மத்திய அமைச்சர் பதில் தெரிவித்துள்ளார்.பரந்தூர் விமான நிலையத் திட்டம் முந்தைய திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த திட்டத்துக்கு எதிராக சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் தவெக தலைவர் ஜோசப் விஜய். கடந்த மே மாதம் தவெக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தவெக தொடர்ந்து எதிர்க்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆளும் கட்சி சார்பில் உறுதியளிக்கப்பட்டது.இந்த நிலையில், விமான நிலைய திட்டத்துக்கு மாற்று இடத்தை முன்மொழிவது தொடர்பான எந்தவொரு தகவல் பரிமாற்றமும் தமிழகத்திடமிருந்து வரவில்லை என்று மத்திய அரசு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.