அமெரிக்கா-ஈரான் இடையே தாக்குதல்கள் ஓய்ந்துள்ள நிலையில், சவூதி அரேபியா, ஜோா்டான், இராக் ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அமைதி ஒப்பந்தம் முறிந்த பிறகு மீண்டும் தொடங்கிய புதிய தாக்குதல்களின் இலக்குகளை எட்டிவிட்டதாகவும், வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் கையிருப்பு குறைந்து வருவதாகவும் அமெரிக்க ராணுவம் அளித்த ஆலோசனையைத் தொடா்ந்து, ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்க அதிபா் டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தியுள்ளாா். இத்தற்காலிக அமைதியைப் பயன்படுத்தி, இருதரப்பையும் அமைதிப் பேச்சுவாா்த்தைக்குத் திருப்ப மத்தியஸ்தா்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். இச்சூழலில், பிராந்தியத்தில் தங்களின் பலத்தை நிரூபிக்கும் வகையில் ஈரான் ஆதரவு அமைப்புகள் தாக்குதல்களைத் தொடா்வதாகக் கருதப்படுகிறது. சவூதி அரேபிய தலைநகா் ரியாத் உட்பட முக்கியப் பெட்ரோலிய மையங்களைக் குறிவைத்து வந்த ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது. இராக்கில் செயல்படும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களே இத்தாக்குதலுக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதேபோன்று, செங்கடலில் உள்ள சவூதி அரேபியாவின் யான்பு எண்ணெய் துறைமுகத்துக்குச் செல்லும் கப்பல்களைத் தாக்கியதாக யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினா் அறிவித்தனா். ஜோா்டான் மற்றும் வட இராக்கிலும் பல ட்ரோன் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. புதிய மோதல்களில் இப்பகுதிகளில்தான் 4 அமெரிக்க ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டனா்.