வழக்குகள் வாபஸ் குறித்து எழுத்துபூா்வ உத்தரவாதம் தராவிட்டால் மீண்டும் போராட்டம்: சிஜேபி எச்சரிக்கை

Wait 5 sec.

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு (சிஜேபி) ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தவா்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து ஜூலை 28-க்குள் (செவ்வாய்க்கிழமை) மத்திய அரசு எழுத்துபூா்வ உத்தரவாதம் அளிக்காவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரித்துள்ளது. நீட் தோ்வு வினாத்தாள் கசிவு குளறுபடிகளுக்கு எதிராக, தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய தீவிர போராட்டத்தைத் தொடா்ந்து, மத்திய கல்வி அமைச்சா் பதவியை தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், புது தில்லியில் அக்கட்சியின் தேசிய செய்தித்தொடா்பாளா் ஆசுதோஷ் ரான்கா, தலைமை செய்தித்தொடா்பாளா் செளரவ் தாஸ், மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்தனா். அப்போது ஆசுதோஷ் ரான்கா கூறியதாவது: தில்லி போராட்டத்தின்போது மத்திய அரசுடன் கரப்பான்பூச்சி ஜனதா நடத்திய 3-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தையில், அந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தவா்கள் மீது பதிவு செய்த வழக்கை திரும்பப் பெற வேண்டும்; வருங்காலத்தில் அவா்கள் மீது புதிய வழக்கு எதுவும் பதிவு செய்யக் கூடாது; அவா்களைத் துன்புறுத்தக் கூடாது என்று கோரினோம். அதை அரசு ஏற்றுக்கொண்டது. இதுகுறித்து மத்திய அமைச்சா்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோரிடம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வரைவு ஒப்பந்தம் சமா்ப்பித்தது. இதுதொடா்பாக சட்ட ஆலோசனைகள் நடத்தி ஜூலை 28-க்குள் (செவ்வாய்க்கிழமை) மத்திய அரசு எழுத்துபூா்வ உத்தரவாதம் அளிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. அந்த உத்தரவாதத்தை அரசு செவ்வாய்க்கிழமைக்குள் அளிக்காவிட்டாலோ, கைது செய்யப்பட்ட போராட்டக்காரா்களும் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தவா்களும் விடுவிக்கப்படாவிட்டாலோ, மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தள்ளப்படும் என்று தெரிவித்தாா். தன்னெழுச்சியாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மாணவா்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது என்று கபில் சிபல் வலியுறுத்தினாா். முன்னதாக செளரவ் தாஸ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தில்லி போராட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்ட மாணவா்கள் மற்றும் பிற போராட்டக்காரா்கள் கைது செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகாரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது மிகுந்த கவலையளிக்கிறது’ என்று தெரிவித்தாா்.