காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்து அறுப்பு: இளைஞா் தலைமறைவு

Wait 5 sec.

சிதம்பரம் அருகே காதலிக்க மறுத்த பிளஸ் 1 மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு தலைமறைவான இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சி.முட்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (28), எலெக்ட்ரீஷியன். இவா், கீழமூங்கிலடி கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்தாராம். ஆனால், அந்த மாணவி ஐயப்பனிடம் பேச மறுத்துள்ளாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை தினம் என்பதால், மாணவி வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட ஐயப்பன், மாணவியின் வீட்டுக்குச் சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினாராம். இதற்கு, மாணவி மறுப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த ஐயப்பன், தான் மறைத்து வைத்திருந்த சிறிய வகை கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம்.மாணவியின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினா், மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாகிவிட்ட ஐயப்பனை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.