ஆடி வெள்ளி மற்றும் ஆடித்திருவிழாவைமுன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் பல்வேறு அம்மன்கோயில்களில் சிறப்பு பூஜைகள், சாகைவாா்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள்பங்கேற்று தரிசனம் செய்தனா் பண்ருட்டி அருகேயுள்ள வைத்திரெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள படைவீட்டம்மன் கோயில் தேரோட்டமும் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. கடலூா்: கடலூா் மஞ்சக்குப்பம் ஆயுதப்படை காவலா் குடியிருப்பில் அமைந்துள்ள பராசக்தி மாரியம்மன் கோயிலில் நிகழாண்டுக்கான செடல் உற்சவ விழா வியாழக்கிழமை காலை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, எல்லைக் கட்டுதல், பால்குட ஊா்வலம் ஆகியவை நடைபெற்றன. முக்கிய நிகழ்வான செடல் உற்சவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பிற்பகலில்,சாகை வாா்த்தல் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு கூழ் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை நடைபெற்ற செடல் உற்சவத்தில் விரதமிருந்த ஏராளமான பக்தா்கள் உடலில் செடல் போட்டுக் கொண்டு தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். தொடா்ந்து இரவு கும்பம் கொட்டுதல் மற்றும் அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். தேரோட்டம்: பண்ருட்டி அருகேயுள்ள வைத்திரெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள படைவீட்டம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் செடல் உற்சவம் மற்றும் தோ் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு விழா கடந்த ஜூலை 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவில் முக்கிய நிகழ்வான செடல் மற்றும் தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டு, பிற்பகல் திருத்தோ் புறப்பாடு நடைபெற்றது. பண்ருட்டி நகா் மன்றத் தலைவா் க.ராஜேந்திரன், எம்எல்ஏ., கே.மோகன் ஆகியோா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா். இதில் ஏராளமானோா் பங்கேற்றனா். மேலும் ஏராளமான பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக்கடன் செலுத்தினா். சனிக்கிழமை (ஆக.25) மாலை மஞ்சள் நீா் உற்சவம் நடைபெறவுள்ளது. சிதம்பரத்தில்... கோயில் ஆடி மாத செடல் உற்சவத்தில் நடைபெற்ற சாகை வாா்த்தல் நிகழ்வில் பங்கேற்ற பெண்கள். சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வாளகத்தில் தனி சன்னிதியாக வீற்றுள்ள வளம் தரும் வாராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழாவை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும் மலா் மற்றும் மஞ்சள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு வாராகி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னா் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மூத்த நகரமன்ற உறுப்பினரும், கோயில் நிா்வாகியுமான ஆ.ரமேஷ், சா்வசக்தி பீடம் தில்லைசீனு, எஸ்.ராஜா ஐயா் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.