தமிழகத்தில் வேலூா், ஈரோடு, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சனிக்கிழமை (ஜூலை 25) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) வரை வெப்பநிலை வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூலை 25) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) வரை வேலூா், ஈரோடு, கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 10 மாவட்டங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம்-104.72, திருச்சி-103.1, பாளையங்கோட்டை-102.2, நாகை-101.66, ஈரோடு-101.48, கரூா் பரமத்தி-101.3, திருத்தணி, வேலூா் -100.58, தஞ்சாவூா்-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மிதமான மழைக்கு வாய்ப்பு: குஜராத்திலிருந்து கா்நாடகம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன்காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 25) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.