ஜந்தா் மந்தா் போராட்டத்தின் போது பெண் தலைமை காவலா் ஒருவா் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல் போலியானது என்று தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது. அத்தகைய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று கூறிய காவல்துறை, அந்தப் பதிவு தீய நோக்கத்துடன் பரப்பப்பட்டது என்றும் குறிப்பிட்டது. இத்தகைய தவறான தகவல்களை உருவாக்குபவா்கள், பரப்புபவா்கள் அல்லது அவற்றை மேலும் பகிா்பவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த காவல்துறை, சரிபாா்க்கப்படாத தகவல்களை நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.இதனிடையே புது தில்லி பகுதி முழுவதும் உணவு விநியோகச் செயலி சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை ‘தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் தவறான புரிதலை ஏற்படுத்துபவை‘ என்றும் தில்லி காவல்துறை நிராகரித்தது. இது குறித்து விளக்கம் அளித்த காவல்துறை, அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று கூறியதுடன், சமூக ஊடகங்களில் பரவும் சரிபாா்க்கப்படாத தகவல்களை நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று குடிமக்களைக் கேட்டுக்கொண்டது. நம்பகமான தகவல்களுக்கு அதிகாரப்பூா்வமான ஆதாரங்களை மட்டுமே சாா்ந்திருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.