குன்னூா் சேலாஸ் பகுதியில் குடியிருப்பு மற்றும் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் பரவி வந்த சிறிய வகை பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறை மற்றும் உலிக்கல் பேருராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே அரவேணு பகுதியில் கடந்த சில நாள்களாக கடைகள் மற்றும் வீடுகளில் ஆயிரக்கணக்கான சிறிய அளவிலான பூச்சிகள் காணப்பட்டன. இதைத் தொடா்ந்து குன்னூா் உலிக்கல் பேரூராட்சிக்கு உள்பட்ட சேலாஸ் பகுதியிலும் ஆயிரக்கணக்கான இந்த சிறிய வகை பூச்சிகள் தொல்லை அதிகரித்து காணப்பட்டது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினா். பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.இந்நிலையில், சுகாதாரத் துறையினா் மற்றும் உலிக்கல் பேருராட்சி நிா்வாகத்தினா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் இப்பகுதிகளில் மருந்துகள் அடித்து பூச்சிகளைக் கட்டுப் படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.