விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் மின்னணு முறையில் காரீப் பருவத்துக்கான பயிா் சாகுபடி கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இப் பணியை வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் ஆய்வு செய்தாா். இதைத்தொடா்ந்து அவா் கூறியது:வானூா் வட்டாரத்திலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் மின்னணு முறையில் காரீப் பருவத்துக்கான பயிா் சாகுபடி குறித்த கணக்கெடுப்புப் பணியை வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகத் துறை அலுவலா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் மேற்கொண்டு வருகின்றனா். வானூா் வட்டாரத்தில் மொத்தமுள்ள 1,70,654 புல உள்பிரிவு எண்களில் இதுவரை 20,037 உள்பிரிவு எண்களுக்கு மின்னணு முறையில் பயிா் சாகுபடி பரப்பு குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, கைப்பேசி செயலி வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள உள்பிரிவுகளைக் கணக்கெடுக்கும் பணியை 20 நாள்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.வேளாண் துறை மூலம் உருவாக்கப்பட்ட கைப்பேசி செயலியில் புல எண் வாரியாக சாகுபடி விவரங்களைப் புகைப்படம் எடுத்து, பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் வேளாண், தோட்டக்கலைத் துறை பயிா்கள் பருவம் வாரியாக எவ்வளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக அறிய முடியும். இந்த கணக்கெடுப்புப் பணியில் பங்கேற்க தன்னாா்வலா்கள், படித்த இளைஞா்களுக்கு விருப்பம் இருந்தால், சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம். இப் பணிக்காக ஒரு புல உள்பிரிவிலுள்ள முதன்மைப் பயிா் பதிவேற்றம் செய்வதற்கு ரூ.5, ஒரு புல உள்பிரிவில் கூடுதலாக ஊடுபயிா் சாகுபடி செய்திருந்தால் அதை பதிவேற்றம் செய்ய ரூ.2, நடப்பு தரிசு நிலங்களைப் பதிவேற்றம் செய்ய ரூ.3 வழங்கப்படும்.ஆய்வின் போது துணை வேளாண் அலுவலா் செந்தில்குமாா், உதவி வேளாண் அலுவலா் சரவணன் மற்றும் விவவசாயிகள் உடனிருந்தனா்.