காஞ்சனமாலைக்கு ஒரு கோயில்!

Wait 5 sec.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகர் மதுரையில் அன்னை மீனாட்சிக்கு கோயில் இருப்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவ்வூரிலேயே மீனாட்சியின் தாயார் காஞ்சனமாலைக்கும் தனிக் கோயிலாக "அருள்மிகு காஞ்சனமாலை அம்மன் திருக்கோயில்' அமைந்துள்ளது.காஞ்சனமாலை என்பவள் பாண்டிய வம்சத்தின் பேரரசி. தனது கணவர் மலையத்துவஜ பாண்டிய மன்னருடன் ஆட்சி செய்தார். சூரிய குலத்தின் மன்னன் சுரசேனனுக்குப் பிறந்தவள் காஞ்சனமாலை. பார்வதி தேவி மீது மிகவும் பக்தி கொண்டவள். காஞ்சனமாலை முற்பிறவியில் வித்யாவதியாக வாழ்ந்த போது, அடுத்த பிறவியில் பார்வதி தேவியே மகளாகப் பிறக்கும்படி வேண்டினாள். அவ்வாறே அடுத்த பிறவியில் தனது கணவருடன் குழந்தை வேண்டி மகா யாகம் செய்தபோது, பார்வதி தேவியின் மறுஅவதாரமான மீனாட்சியே குழந்தையாக அமைந்தார்.சிவபெருமான் தம்முடைய அடியார் பொருட்டுச் செய்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களை பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணமாக இயற்றியுள்ளார். அதில் ஏழுகடல் அழைத்த படலம் மற்றும் மலையத்துவஜனை அழைத்த படலத்துடன் சம்பந்தப்பட்டது காஞ்சனமாலை கோயில். ஏழு கடல் அழைத்த படலம்சிவபெருமான் சுந்தர பாண்டியனாகி உலகை ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் அங்கு வந்து இறைவனை வணங்கித் திரும்பிய கெüதம முனிவரை காஞ்சனமாலை அழைத்து, ""என்னுடைய பிறவித் துன்பத்தை நீக்க வல்ல தவம் யாது?'' எனக் கேட்டாள். அவர் , ""மூன்று வகை தவங்களில் உடலால் செய்யப்படும் காயிகமே மிகச்சிறந்தது. தீர்த்தங்களில் கங்கை நதியில் நீராடுவது நலம். எனினும், அந்த நதிகள் வந்து கூடும் கடலில் நீராடுதல் மிகச்சிறந்தது.'' என்றார். காஞ்சனமாலை இதை மதுரை மீனாட்சி அம்மனின் அவதாரமான தடாதகைப் பிராட்டியார்க்குக் கூற, அவர் இறைவனிடம் கூறினாள். உமையாளின் திருமொழிக்கேற்ப சிவபெருமான் , ""ஒரு கடல் என்ன? ஏழு கடல்களையும் வரவழைப்போம்...'' என்று கூவி அழைத்தார். அவ்வாறு ஏழு கடல்களும் ஏழு நிறங்களுடன் மதுரையின் கிழக்கில் உள்ள ஒரு குளத்தில் வந்து நின்றன. மலையத்துவஜனை அழைத்த படலம் சுந்தரபாண்டியனாகிய சிவபெருமானும் தடாதகைப் பிராட்டியும், காஞ்சன மாலையை அழைத்துக் கொண்டு குளக்கரையை அடைந்தனர். அங்கிருந்த அந்தணர்கள் கணவனுடைய கை, மகனுடைய கை அல்லது பசுங் கன்றின் வால் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பிடித்துக் கொண்டு நீராடுவதே முறை எனக் கூறினர். உடனே சுந்தரபாண்டியன் சுவர்க்கத்தில் இந்திரனுடன் இருந்த மலையத்துவஜன் மீது திருவுள்ளம் செலுத்தினார். உடன் மலையத்துவஜ பாண்டிய மன்னன் ஒரு தெய்வ விமானத்தின் மேல் மதுரையில் ஏழு கடல் இருந்த குளக்கரையில் வந்து சேர்ந்தான்.காஞ்சனமாலை மிக்க மகிழ்ச்சியடைந்து, தன் கணவனின் கையைப் பற்றிக் கொண்டு ஏழுகடலில் மூழ்கி நீராடினாள். இருவரும் கரையேறியவுடன் ஒரு தேவ விமானத்தில் ஏறி சிவலோகத்தை அடைந்தார்கள் என்பது புராண வரலாறு. காஞ்சனமாலை கோயிலில் உள்ளே நுழைந்தவுடன் சிறிய சந்நிதிகளில் விநாயகர், ஆறுமுகப்பெருமான் மற்றும் வலது பக்கம் காஞ்சன மாலையுடன் மலையத்துவஜ பாண்டியன் திருவுருவ புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன. சந்நிதி தெய்வமாக காஞ்சனமாலை இருந்தாலும், இது அன்னையை முன்னிலைப்படுத்தும்விதமாக காஞ்சனமாலை அம்மன் திருக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது. இக்கோயில் இறைவன் ஏழு கடல் அழைத்த எம்பிரான் என்றும், அன்னை மீனாட்சி தடாதகைப் பிராட்டியார் என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆடலரசன் நடராஜர், சிவகாமி, ராஜா, மந்திரி, முனிவர் ஆகியோர் சுவரில் புடைப்புச் சிற்பமாகவும், நவகிரகங்கள் தம்பதி சகிதமாகவும் அருள்பாலிக்கிறார்கள். ஏழு புண்ணிய தீர்த்தக்குளம் இருந்த இடத்தில் மீனாட்சி திருக்கோயில் சார்பாக பல்லாண்டுகளுக்கு முன்பே வணிக வளாகம் கட்டப்பட்டு இயங்கி வருவது வருத்தத்துக்குரியது. அதே வணிக வளாகத்தில் கீழ்த்தளத்தில் சிவபெருமான், பார்வதி, கெüதம முனிவர் கீழே இறைவனை வணங்கும் விதமாக காஞ்சனமாலை, மலையத்துவஜ பாண்டியன், ஏழு தீர்த்தங்களை நினைவுபடுத்தும் வகையில் சப்தகன்னியர் திருவுருவங்கள் உள்ளன.திருமணம் ஆகாதவர்கள், குடும்பப் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து சுவாமியை நினைத்து பிரார்த்தனை செய்தால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும், குடும்பப் பிரச்னைகள் விலகும் என்பது நம்பிக்கை. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் எதிரே புதுமண்டபத்தின் பின்புறத்தில் ஏழுகடல் தெருவில் அருள்மிகு காஞ்சனமாலை அம்மன் திருக்கோயில் அமைந்திருக்கிறது.காலை 8 மணி முதல் மதியம் 12 வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.- மதுரை ஆர்.கணேசன்