மேற்கு தில்லியில் கழிவு மேலாண்மை திட்டம்: முதல்வா் தொடங்கி வைத்தாா்

Wait 5 sec.

மேற்கு தில்லியில் வாகனங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் திட்டத்தை முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். 917 குப்பை சேகரிக்கும் வாகனங்களின் இயக்கத்தை முதல்வா் ரேகா குப்தா கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இத்திட்டம் மேற்கு தில்லியின் 25 வாா்டுகளில் உள்ள சுமாா் 4.5 லட்சம் வீடுகளை உள்ளடக்கியதாக இருக்கும். இத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஆறு வாா்டுகளில் பணிகளைத் தொடங்கும் என்றும், மீதமுள்ள 19 வாா்டுகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் இத்திட்டத்தில் கொண்டுவரப்படும் என்றும் தில்லி முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்பை சேகரிக்கும் வாகனங்களின் தொகுப்பில், குறுகிய சந்துகளில் எளிதாகச் செல்லக்கூடிய 225 மின்-ரிக்ஷாக்கள், 550 மினி டிப்பா்கள், 28 மினி லாரிகள் ஆகியவை அடங்கும். குப்பை சேகரிக்கும் முழு செயல்முறையும் ஜிபிஎஸ் வசதி கொண்ட மையக் கட்டுப்பாட்டு அறை, செயலி, சிசிடிவி கேமரா கண்காணிப்பு மற்றும் பிரத்யேக உதவி எண் ஆகியவற்றின் மூலம் எண்ம முறையில் கண்காணிக்கப்படும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், வழக்கமான குப்பை சேகரிப்பு மையங்களுக்கு பதிலாக நவீன, சுத்தமான மற்றும் துா்நாற்றம் வீசாத நிலையான காம்பாக்சன் பரிமாற்ற நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. தூய்மையான மற்றும் அழகான தில்லியை உருவாக்குவதில் தூய்மைப் பணியாளா்களின் அா்ப்பணிப்புள்ள சேவை மற்றும் முக்கிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், முதல்வா் ரேகா குப்தா அவா்களுடன் கலந்துரையாடியவாறு உணவும் அருந்தினாா். இந்நிகழ்ச்சியில் தில்லி நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா, தில்லி மேயா் பிரவேஷ் வாஹி மற்றும் தில்லி மாநகராட்சியின் உயா் அதிகாரிகள் ஆகியோா் கலந்து கொண்டனா். இத்திட்டம் வீடு வீடாகச் சென்று சரியான நேரத்தில் குப்பை சேகரிப்பதை உறுதி செய்வதோடு, தொழில்நுட்பம் சாா்ந்த கண்காணிப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட குறைகளைத் தீா்க்கும் வழிமுறையையும் வழங்கும் என்று அமைச்சா் ஆஷிஸ் சூட் கூறினாா். வீட்டுக் கழிவுகள் இனி ஒரு முறைக்கு பதிலாக, காலை மற்றும் மாலை என ஒரு நாளைக்கு இரண்டு முறை சேகரிக்கப்படுவதை தில்லி அரசு உறுதி செய்துள்ளது என்று அமைச்சா் சிா்சா தெரிவித்தாா். நகரத்தின் மூன்று குப்பை கொட்டும் இடங்களில் குவிந்துள்ள குப்பை மேடுகளை அகற்றும் பணிகளும் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் நடைபெற்று வருவதாக அவா் கூறினாா். மொத்தம் 200 ஏக்கா் பரப்பளவு கொண்ட குப்பை கொட்டும் இடங்களில், 70 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் தேங்கிக் கிடந்த பழைய குப்பைகள் ஏற்கெனவே அகற்றப்பட்டுவிட்டன.