வேலூரில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்க உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்காக, மாநகராட்சி களப்பணியாளா்களுக்கு இறுதிக் கட்டப் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது. வேலூா் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை வேலூா் மாவட்ட நிா்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வேலூா் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடவுள்ள களப்பணியாளா்களுக்குத் தொடா் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநகராட்சியின் 2-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 225 களப்பணியாளா்களுக்கான இறுதிக் கட்டப் பயிற்சி முகாம் சத்துவாச்சாரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்த முகாமுக்கு, மாநகராட்சி உதவி ஆணையா் ஸ்டான்லி பாபு தலைமை வகித்தாா். உதவிப் பொறியாளா் (திட்டம்) எல்.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். பயிற்சி முகாமில், கணக்கெடுப்புக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள கைப்பேசி செயலியை கையாளுவது எப்படி, பொதுமக்களை எவ்வாறு அணுகி விவரங்களைச் சேகரிப்பது என்பது குறித்து சிறப்புப் பயிற்சியாளா்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், எந்தவொரு வீடும் விடுபடாமல் 100 சதவீதம் கணக்கெடுப்புப் பணிகளைத் துல்லியமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொடா்ந்து, களப்பணியாளா்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கும் பயிற்சியாளா்களால் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.