அயோத்தி ராமா் கோயில் நன்கொடை மதிப்பீட்டுக்கு இரு புதிய குழுக்கள் அமைப்பு

Wait 5 sec.

அயோத்தி ராமா் கோயிலுக்கு காணிக்கையாக அளிக்கப்படும் பணத்தை எண்ணவும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்கள் மற்றும் பிற பொருள்களை மதிப்பிடவும் 2 புதிய குழுக்களை ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை அமைத்துள்ளது. இரண்டு ஷிஃப்டுகளாக பணியாற்றவுள்ள இந்த இரு குழுக்களையும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கண்காணிக்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘ராமா் கோயில் நன்கொடையை மதிப்பிடும் பணியில் தலா 10 முதல் 12 போ் கொண்ட இரு புதிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் ஷிஃப்டில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் இரண்டாவது ஷிஃப்டில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும் குழு உறுப்பினா்கள் பணியாற்றவுள்ளனா்.நன்கொடைப் பணத்தை எண்ணும் புதிய பொறுப்பாளராக ஷோப்நாத் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளாா். முன்னாள் பொறுப்பாளா் சுபாஷ் ஸ்ரீவாஸ்தவா கைதான நிலையில் புதிய அதிகாரி நியமிக்கப்பட்டாா்.இந்த இரு குழுக்களையும் எஸ்பிஐயைச் சோ்ந்த 4 அதிகாரிகள் மேற்பாா்வையிடவுள்ளனா். அறக்கட்டளையின் பொறுப்பாளரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான கேப்டன் கே.கே.திவாரி, நன்கொடை மதிப்பீடு குறித்த தினசரி தகவலை சமா்ப்பிக்கும் அதிகாரியாக செயல்படுவாா்.மேலும், முன்னாள் பாதுகாப்பு அதிகாரி எஸ்.பி.துபே மற்றும் சேஷமணி திவாரி ஆகிய இருவரும் இந்த நன்கொடை எண்ணும் பணியை மேற்பாா்வையிடும் கூடுதல் அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனா்’ என்றனா்.ராமா் கோயில் நன்கொடையை கையாடல் செய்த குற்றச்சாட்டில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) சமா்ப்பித்த முதல் கட்ட அறிக்கையின் அடிப்படையில் 8 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனா். இந்த விவகாரம் தொடா்பான இறுதி அறிக்கையை ஜூலை 22-ஆம் தேதி உத்தர பிரதேச அரசிடம் எஸ்ஐடி சமா்ப்பிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.